Wednesday 9 January 2019

"வரலாற்றுப் பேரரசு"

மலாக்கா முத்துக்கிருஷ்ணனுக்கு மேலும் ஒரு விருது. இம்முறை மலேசிய சிகை அலங்கரிப்பாளர் உரிமையாளர் சங்கம் "வரலாற்றுப் பேரரசு"  என்னும் விருதினை அளித்துக்  கௌரவித்திருக்கிறது.

 விருதுகள் முத்துக்கிருஷ்ணனுக்கு ஒன்றும் புதிதல்ல. பல விருதுகள் அவருக்குக் கிடைத்திருக்கின்றன. நிச்சயமாக அந்த விருதுகளுக்கு அவர் தகுதியானவர். அதில் ஏதும் ஐயமில்லை.

நான் அவரை நேரடியாக அறியாதவன். எல்லாம் பத்திரிக்கைகள் மூலம் தான். முதன் முதலாக அவருடைய எழுத்தை, கட்டுரையை, தமிழ் நேசன் நாளிதழில் படித்ததாக ஞாபகம்.  ஜப்பானில் இருந்து தமிழ் ஒலிபரப்பு  என்பதாக அவர் எழுதியிருந்தார்.  நானும் அதனை ஆதரித்துக் கடிதம் எழுதினேன். அதிலிருந்து அவர் எழுத்து எனக்கு அறிமுகம்.

நான் கட்டுரைகளை அதிகம் விரும்பி வாசிப்பவன்.  சமீப காலத்தில் தமிழ் மலர் நாளிதழில் அவர் எழுதி வரும் கட்டுரைகளைப் படித்து வியப்படைந்தேன். நிறைய ஆய்வுகள். நிறைய களப்பணிகள். நிறைய சரித்திர வாசிப்புக்கள்.  

இப்படியெல்லாம் படிப்பதற்கும் எழுதுவதற்கும் - கொஞ்சம் அல்ல - நிறைய, நிறைய - ஆர்வம் வேண்டும்.  எத்தனையோ பேர் "போதுமடா சாமி!" என்று சலிப்படைந்து விட்டனர். ஆனால் முத்துக்கிருஷ்ணன் இன்னும் சலிப்படையவில்லை. இன்னும் எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறார்!  ஏன்? ஒன்று சமுதாய நோக்கம் அவர் எழுத்தில் இருக்கிறது. இனப்பற்று அவரிடம் இருக்கிறது. மொழிப்பற்று அவரிடம் இருக்கிறது. இந்த சமுதாயம் முன்னேற வேண்டும் என்னும் அசைக்க முடியாத நம்பிக்கை அவரிடம் இருக்கிறது.  இன்னும் அவர் எழுதுவார் என எதிர்ப்பார்க்கலாம்.

இவ்வளவு சொன்ன எனக்கு ஒரு மனக்குறை இருக்கிறது.  இவ்வளவு விருதுகள் கிடைக்கப்பெற்ற அவருக்கு இந்த விருதுகள் எல்லாம் எங்கிருந்து வந்தன?  எல்லாம் "நமக்குள்ளேயே" கொடுக்கப்பட்ட விருதுகள் என்னும் மனக்குறை  எனக்கு  இருக்கிறது.

எழுத்தாளர்களுக்கு, பத்திரிக்கையாளர்களுக்கு,  அரசாங்க விருதுகள் கிடைப்பதை  ம.இ.கா. வினர் விரும்பவில்லை. அதனால் நாம் நீண்ட காலம் புறக்கணிக்கப்பட்டோம். பக்காத்தான் அரசாங்கம் அப்படி இருக்காது என நம்புகிறோம்.

ஒரு பத்திரிக்கையாளரும், டாக்டர் மகாதிரின் நெருங்கிய சகாவுமான ஏ. காதிர் ஜாசினுக்கு எப்படி டத்தோ விருது கிடைத்ததோ அதே போல முத்துக்கிருஷ்ணனுக்கு கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன். அவரின் திறமைக்கு டத்தோ விருது பொருத்தமானது கௌரவமானது என நம்புகிறேன்.

மீண்டும் "வரலாற்றுப் பேரரசு" அவர்களுக்கு வாழ்த்துகள்!

No comments:

Post a Comment