பத்துமலை பரபரப்பு கொஞ்சம் குறைந்திருக்கிறது. பக்தர்களின் கூட்டத்திற்குப் பஞ்சமில்லை. ஆனால் பக்தர்கள் பத்துமலையில் செய்த "குப்பை மேடு" கலாச்சாரம் அதிகம்!
சில பிரச்சனைகளை நம்மால் ஏனோ தீர்த்துக் கொள்ள முடியவில்லை. நமது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள முடியவில்லை. சிறிய வயதில் பெற்றோர்கள் நமக்குச் சொல்லிக் கொடுக்காததால் வந்த வினை இது. பெற்றோர்களே தொடர்ந்து செய்கின்ற தவறுகளைப் பார்த்து குழைந்தைகளும் அவர்களையே பின் பற்றுகின்றனர். பெற்றோர்களை எப்படி திருத்துவது?
நாம் ஒரு புண்ணிய தலத்திற்குப் போகும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்னும் நாகரிகம் நம்மிடையே இல்லை. ஏன் புண்ணிய தலங்களுக்குப் போகிறோம்? இறைவனை தரிசிக்க, இறைவனை வேண்ட, இறைவனின் ஆசி பெற , இறைவன் நமது குற்றங்குறைகளை மன்னிக்க, பிள்ளை வரம் கேட்க - இப்படி பல வேண்டுதல்களோடு நாம் புண்ணிய தலங்களுக்குப் போகிறோம். எல்லாம் சரி தவறேதும் இல்லை.
நம் வேண்டுதல்கள் முடிந்ததும் அல்லது நிறைவேறியதும் என்ன செய்கிறோம்? சாப்பிட்டவைகளை ஆங்காங்கே தூக்கி எறிகிறோம். பாதி சாப்பீட்டும், பாதி சாப்பிடாமலும் உள்ள நெகிழிப் பைகளை அனாவசியாமாக கண்ட கண்ட இடங்களில் வீசி எறிகிறோம்.
நண்பர் ஒருவர் சொன்னார்: "சுற்றுப்பிராகரத்தை வலம் வந்து சாமியைக் கும்பிட்டுவிட்டு அங்கேயே சோற்றுப்பைகளை வீசுவதும், குடித்துவிட்டுப் போத்தல்களை தூக்கி எறிவதும் ... சொல்லவே கஷ்டமாக இருக்கிறது. நம் சமூகத்தைப் பற்றி நினைக்கும் போது ...சே!....வெட்கமாக இருக்கிறது"
இது ஒரு கஷ்டமான சூழ்நிலை. நாம் நல்லவர்களாக இருக்கலாம். பக்தர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று யாரும் சான்று பகர முடியாது. நல்லவர்களோ, கெட்டவர்களோ ஒரு சில விஷயங்களை நாம் பின்பற்றலாம். கார் ஓட்டுகிறோமே சட்டத்தை மீற முடியுமா? சட்டம் நல்லவர்கள் கெட்டவர்கள் பார்ப்பதில்லை. அதே போல ஒரு சில விதிமுறைகளை நாம் பின்பற்றக் கற்றுக் கொள்ள வேண்டும்.
வீட்டில் உளளே கண்டபடி குப்பைகள் போடுவோமா? சுத்தம் சுகம் தரும் என்று பள்ளியில் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பாடம் வீட்டுக்கு மட்டும் அல்ல. பொது இடங்களுக்கும் சேர்த்துத் தான். அதுவும் கோவில் என்பது புனிதம் சார்ந்த இடம். குப்பைகளைக் குவித்து விட்டு, இறைவன் சந்நிதியில் உங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேற வேண்டுமென்று பிரார்த்தனை செய்தால் உங்கள் பிராரத்தனை நிறைவேறுமா?
கொஞ்சம் யோசியுங்கள். பொது இடம் பொது நலம். எல்லாக் காலங்களிலும் நாம் பொது நலத்தைப் பேண வேண்டும். அதுவும் புனிதம் சார்ந்த இடங்களில் இன்னும் அதிகப் பொறுப்புணர்ச்சியோடு நடந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த "குப்பைப்போடும்" கலாச்சாரம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. குப்பைத் தொட்டிகள் வைத்தும் அதனை யாரும் சீண்டிப் பார்ப்பதில்லை. என்ன பொறுப்பற்ற சமூகம் நாம்? எதிலும் ஒழுங்கில்லை! எதிலும் பொறுப்பில்லை! எதிலும் அலட்சியம்!
இன்னும் நாம் திருந்தவில்லை! அது பற்றி நாம் இன்னும் மனம் வருந்தவுமில்லை!
எப்போது திருந்துவோம்? எப்போது மனம் வருந்துவோம்?
No comments:
Post a Comment