சில சமயங்களில் சில செய்திகளைப் படிக்கும் போது நமது மனம் கனத்துப் போகிறது.
வாழ்க்கை மனிதனை எப்படியெல்லாம் மாற்றியமைக்கிறது. சரியான பாதை, சரியான வழி தெரியவில்லையென்றால் எப்படி எல்லாம் கஷ்டப்பட வேண்டியுள்ளது. அதுவும் ஏழை எளியவராய் பிறந்து விட்டால் சொல்லவே வேண்டாம். தொட்டதெல்லாம் தொட்டாசிணுங்கி என்றால் என்ன தான் வழி?
இப்படித்தான் ஒரு நண்பரைப் பற்றி படிக்க நேர்ந்தது. கணவன் மனைவி இரண்டு பிள்ளைகள். நிரந்தர வேலை இல்லை. அவ்வப்போது கிடைத்த வேலைகளை செய்து வந்தார் அவர். மனைவி ஆஸ்த்மா நோயாளி. அவருக்கும் வேலை இல்லை. ஏதோ பூ மாலைகள் கட்டும் வேலை. கொஞ்சம் வருமானம்.
இந்த நேரத்தில் விபத்தில் மாட்டினார் அந்தக் குடும்பத் தலைவர். கால் முறிந்தது. நடப்பதில் சிரமத்தை எதிர் நோக்கினார். வீடு இல்லை. வேலை இல்லை. பேரூந்து நிலையத்தில் கொஞ்சம் நாள் வாசம். அருகில் இருந்த இஸ்லாமிய உணவகம் அவருக்கு உணவுகள் கொடுத்து உதவியது. அவருடைய இரண்டு பிள்ளைகளுக்கும் பள்ளியிலேயே இலவச உணவு கிடைக்கும்.
கடைசியில் அவருக்கு உதவியது எல்லாம் ஒரு வாளி தண்ணீரும் ஒரு துண்டும். அதனை வைத்து வியாபாரத்தைத் தொடங்கினார். கார்களைத் துடைத்து அங்கிருந்து கிடைத்த சொற்ப வருமானத்தை வைத்து ஏதோ வாழ்க்கை ஓடியது. நல்ல காலம் என்றால் எழுபது வெள்ளி கிடைக்கும். கெட்ட காலம் என்றால் ஒன்றுமே கிடைக்காது! இந்த நேரத்தில் அவருடைய மகளும் கொஞ்சம் உதவியாக இருப்பார். வலிய போய் வாடிக்கையாளர்களைக் கேட்டு தந்தைக்கு தொழிலைக் கொண்டு வருவார்.
இந்த நேரத்தில் தான் ஒரு மலாய்க்கார நண்பர் நல்ல உள்ளம் படைத்த மனிதர் அவருடைய பிரச்சனைகளை அறிந்து தனது முகநூலில் அதனை வெளியிட்டு உதவி செய்ய நினைப்பவர்கள் அவருக்கு உதுவுங்கள் என்று கேட்டுக் கொண்டார். இப்போது சுகுமாரன், கண்ணகி அவரது பிள்ளைகள் ஷர்மினி, ஹரிஹரன் ஆகியோரது வாழ்க்கை மாறி விட்டது. அந்த மலாய்க்கார நண்பருக்கு ஆயிரம் கோடி வாழ்த்துகள்! முகநூலை எதெதற்கோ பயன்படுத்துகிறோம். ஒரு நல்ல காரியம் செய்தால் எப்படி நல்லது நடக்கும் என்பது நமக்குக் கிடைத்த பாடம்.
ஒரு விஷயத்தில் நான் அந்தத் தம்பதியரைப் பாராட்டுகிறேன். அவ்வளவு கஷ்டத்திலும் அவர்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி இருக்கிறார்கள். ஆம், சராசரியை விட கீழ் நிலையில் இருந்த அந்தத் தம்பதியினருக்குக் கல்வியின் மேன்மை தெரிந்திருக்கிறது.
இது போது இந்த சமுதாயம் உயர்வதற்கு!
No comments:
Post a Comment