Wednesday 16 January 2019

ஆறு மாதங்களே போதும்..!

அரசு சாரா இயக்கமான  "டிரா" அமைப்பு அரசாங்கத்திற்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

நம்மைப் பொறுத்தவரை குடியுரிமை, நீல அடையாள அட்டை - இவைகள் தான் நம் இனத்தவரிடையே முதலிடம் வகிக்கிறது. நீல அடையாள அட்டை  இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்காது. இது தான் தலையாயப் பிரச்சனை. வேலை இல்லாதவன் எப்படி வாழ்வான்? அவன் குடும்பத்தை யார் காப்பாற்றுவார்?

அவன் வேறொரு நாட்டில் பிறந்திருந்தால் அவனுடைய நிலைமை வேறு. ஆனால் அவன் இங்குப் பிறந்தவன். இந்த மண்ணில் பிறந்தவன். ஏதோ ஒரு காரணம் அவன் பிறப்பு பதிவு செய்யபட வில்லை. அதற்கு அவன் காரணமல்ல. என்னைக் கேட்டால் அரசாங்கமே அதற்குக் காரணம் என்பேன்!  எப்படிப் பார்த்தாலும் அதற்கான காரணம் அரசாங்கம் தான்!

குடியுரிமைக்காக காத்திருக்கும் ஆண்டுகளுக்கு எந்த வரம்புமில்லை! பத்து ஆண்டுகல், இருபது ஆண்டுகள் என்று காத்துக் கிடப்பவர்கள் ஏராளம்! எதற்கும் ஒரு வரம்புண்டு. 

எந்தத் தலை போகிற பிரச்சனையானாலும் அரசாங்கம் மனது வைத்தால் ஆறு மாதங்களே போதும். முடியாது என்று சொல்லுவதற்கு எந்த நியாயமுமில்லை. அப்படி முடியாது என்றால் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் தங்களது பணிகளைப் பொறுப்புணர்வோடு செய்யவில்ல என்பது பொருள்! நிறைய சோம்பேறிகளை வேலைக்கு வைத்திருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்! 

அரசாங்கம் பொறுப்பில்லாமலிருந்தால் பொது மக்கள் பாதிக்கப்பட வேண்டுமா என்பது தான் கேள்வி. நாம் சொல்ல வருவதெல்லாம் காத்திருக்கும் நாள்களைக் குறையுங்கள் என்பது தான். முந்தைய அரசாங்கத்தில் குட்டி நெப்போலியன்களின் அதிகாரம் தூள் பறந்து கொண்டிருந்தது என்பது நாம் அறிந்தது தான்! இப்போது  பக்கத்தான் அராசங்கத்திலும் அது தான் நடக்கிறது என்றால்  புதிய அரசாங்கமும் வீண் என்கிற எண்ணம் தானே மக்களிடம் ஏற்படும்!அதுவும் குறிப்பாக இந்தியர்கள்  குடியுரிமை, அடையாள அட்டை அதனால் ஏற்படுகின்ற வேலையில்லாப் பிரச்சனை என்று ஒரு சங்கிலித் தொடர் நீண்டுக் கொண்டே போகிறதே! பழைய அரசாங்கத்தின் மீது ஏற்பட்ட வெறுப்பு தானே  புதிய அரசாங்கம்? 

டிரா அமைப்பு என்ன வேண்டுகோள் வைக்கிறது?  குடியுரிமை கொடுப்பதை விரைவு படுத்துங்கள். நீல அடையாள அட்டை கொடுப்பதை விரைவு படுத்துங்கள். சிவப்பு அடையாள அட்டையை விரைவு படுத்துங்கள். தத்தெடுப்பு விவகாரங்களை விரைவுபடுத்துங்கள்.  விரைவு என்பது தான் அவர்கள் விடுத்திருக்கும் கோரிக்கைகளின் சுருக்கம். இதைத் தான் மக்களும் சொல்லுகிறார்கள். மக்களின் சார்பில் அவர்களும் சொல்லுகிறார்கள்.

ஒரு வித்தியாசம்.  தேர்தல் சமயத்தில் இந்தக் கோரிக்கைகளைப் பற்றி பேசிய அன்றைய எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் - இன்று  நாட்டை வழி நடத்தும் அதே அரசியல்வாதிகள் - பேசாமல் வாய் திறக்க முடியாமல்  தடுமாறி நிற்கிறார்கள்!  ஆனால் மக்களுக்கு  வேறு  வழி  இல்லை. அதனால்  பேச வேண்டிய  கட்டாயம்.

ஆமாம்! பிரச்சனைகளைத்  தீர்க்க  ஆறு மாதங்கள்  போதும்!
 

No comments:

Post a Comment