Friday 25 January 2019

வேறு மாற்று வழி இல்லையா...?

"கம்போங் சுங்கை கெத்தா மக்களுக்கு உதவ தான் ஆசை ஆனால் என்ன செய்வது  அவர்கள் மாற்றான் வீட்டு  நிலத்தில்  சட்டத்திற்குப் புறம்பாக இருந்து கொண்டு சட்டம் பேசினால், நாங்கள் என்ன செய்வோம்?" என்கிறார் சட்டமன்ற உறுப்பினர்  ஆர்,சண்முகம்.

அவர் சொல்லுகின்ற நியாயத்தை நாம் மறுக்கவில்லை. ஆனால் நில உரிமையாளர் நாற்பது ஆண்டு காலமாக  அந்த மக்கள் தங்குவதற்கு அந்த இடத்தை விட்டுக் கொடுத்தாரே அதே போல மின்சாரத்தையும், குடிநீரையும் விட்டுக் கொடுக்கலாமே!  மக்கள் தானே அந்தக் கட்டணத்தைச் செலுத்தப்  போகிறார்கள். அதற்கு ஏன் தடங்கள்?

ஒரு நில உரிமையாளர் நாற்பது ஆண்டுகள் ஏன் அவர்கள் தங்குவதற்கு அனுமதித்தார்? நாற்பது  ஆண்டுகள் ஏன் அவர் பொறுமை காத்தார்? இப்படி எல்லாம் பொறுமை காப்பவர்கள் நம் நாட்டில் இருக்கிறார்களா/  இத்தனை ஆண்டுகள் அவர்கள் குடியிருக்க அனுமதித்திருக்கிறார் என்றால் அதைக் கேட்பதற்கே  சந்தேகத்தை  எழுப்புகிறதே!

பாதிக்கப்பட்ட ஒருவர் அந்த நிலத்தை தனது தந்தையார் வாங்கியது எனவும் அதற்கான ரசீதுகள் எல்லாம் தங்களிடம் இருப்பதாகச் சொல்லுகிறாரே! ஏழை எளியவர்கள், பாமர மக்கள், கல்வியறிவு இல்லாதவர்கள்,  தோட்டப் பாட்டாளிகள் - இவர்களைப் போன்றோர் பல இடங்களில் ஏமாற்றப் பட்டிருக்கிறார்கள். இப்போதும்  ஏமாற்றப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்! . 

நிலத்தின் உரிமை ஒருவரின் பெயரில் இருக்கலாம். சட்டம் அவர் தான் உரிமையாளர் என்று சொல்லலாம். ஆனால் அந்த நிலத்திற்கு ஒருவரின்  தந்தை பணம் போட்டிருக்கிறார் என்றால்  அதனையும் பார்க்க வேண்டும். எங்கே அந்த மக்கள் ஏமாற்றப் பட்டிருக்கிறார்கள், எந்த இடத்தில் ஏமாற்றப் பட்டிருக்கிறார்கள் என்பதையும் ஆராய வேண்டும்.

இதையெல்லாம்  ஆராய்ந்து பார்த்த பின்னர் தான் "என்னால் ஒன்றும்  செய்ய முடியவில்லை!"  என்கிறார் சண்முகம்! உண்மை தான். நில உரிமை யார் பெயரில் இருக்கிறதோ அவர் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார் என்பது நமக்குப் புரிகிறது.

மின்சாரக் கட்டணம் கட்டவில்லை என்று எப்படி அவர்கள் மீது குற்றச்சாட்டுப் பாய்கிறதோ  அதே போல அவர்கள் பக்கத்து நியாயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். வேண்டுமென்றே கட்டவில்லை என்பது பொய்க் குற்றச்சாட்டு!

சரி இவர்களின் பிரச்சனைக்கு என்ன தான் முடிவு?  சண்முகம் அவர்கள் பேசுவதைப்  பார்த்தால்  இதற்கு  எந்த  முடிவும்  கிடையாது  என்றே தோன்றுகிறது!  கஷ்டப்பட்டு உழைத்து  அந்த நிலத்தில்  போட்ட  பணத்திற்கு  எந்த புண்ணியமும் இல்லாமல் போய்விட்டது. அவர்கள் ஏமாற்ற்ப்பட்டிருக்கிறார்கள் என்பது புரிகிறது. என்றாலும் அவர்களால் அதனை மெய்ப்பிக்க முடியவில்லை.  பணம் போனது போனது தான்.

பக்கத்தான் அரசங்கத்திலும் அவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று எதிர்ப்பர்க்க முடியாது! 

வேறு மாற்று வழி உண்டா என்பதை ஒய்.பி. தான் சிந்திக்க வேண்டும். காரணம் அது அவரது தொகுதி! அவரது தொகுதி மக்கள்!

No comments:

Post a Comment