இங்கு, நமது நாட்டில், தமிழர்கள் வாழுகின்ற சில இடங்களைப் பார்க்கின்ற போது "அத்திப்பட்டி" யை விட இன்னும் கேவலமாக இருக்கிறது என்பது உண்மை!
ஒரு காலத்தில் தோட்டப்புறத்தில் வாழ்ந்தவர்கள் என்னவோ சொந்த வீட்டில் இருக்கிறார்கள் என்று நினைத்தாலும் அரசாங்கத்தில் உள்ளவர்கள் தங்களது கடமைகளைச் செய்யாமல் இருப்பது என்ன காரணம் என்று நமக்குப் புரியவில்லை.!
இவர்கள் கடமைகளைச் செய்யாமல் தடுப்பவர் யார்? இங்கு வாழ்கின்ற மக்கள் தங்களுக்குத் தண்ணீர் வசதி வேண்டும், மின்சாரம் வேண்டும் என்று பல ஆண்டுகளாக அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.மாநிலத்தின் மந்திரி பெசார் வரையில் சென்றிருக்கிறார்கள். ஆனால் எதுவும் நகரவும் இல்லை, நடக்கவும் இல்லை! வேறு எங்கு செல்வது?
கெடா மாநிலம், பீடோங் அருகே, கம்போங் சுங்கை பெத்தா, டிவிஷன் 2, என்கிற பெயருள்ள தோட்டமே அது. ஒரு வசதியும் இல்லாத ஒரு தோட்டத்தில் வாழ்ந்து கொண்டு காலத்தைக் கழித்துக் கொண்டிருக்க இவர்களுக்கு என்ன தலைவிதியா? யாரும் சீண்டாத ஒரு தோட்டம் தான். ஆனால் தேர்தல் வரும் போது மட்டும் வாக்குகளுக்காக அவர்களைத் தேடிப் போகிறார்களே அது ஏன்?
சரி, அது தான் பாரிசான் அரசாங்கம்! இப்போது நிலைமை மாறி இருக்கிறதே!
மாநில பக்கத்தான் அரசாங்கத்தில் இந்தியர்களின் விவகாரத்திற்குப் பொறுப்பானவர் சண்முகம் ரங்கசாமி. தண்ணீர், மின்சாரம் - பொறுப்பு சாம்ரி யுசோப். அதற்கு மேல் மந்திரி பெசார். அதற்கு மேல் அன்வார் இப்ராகிம். இன்னும் பிரதமர் வரையிலும் போகலாம். ஆனால் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் மிக முக்கியமானவர்கள். அவர்களுக்கு வேலை கொடுக்கப்பட வேண்டும். அவர்களை வேலை வாங்க வேண்டும்.
முடியாது என்று எதுவும் இல்லை. முடியாது என்று சொல்லப்பட்ட ஒரு சில விஷயங்கள் இப்போது முடிகிறதே! முடியும் என்று நம்புங்கள். அத்திப்பட்டியை அலங்காரப்பட்டியாக ஆக்கிக் காட்டுங்கள்! குனிந்தது போதும்! நிமிர்ந்து நில்லுங்கள்! உரிமைகளை விட்டுக் கொடுக்காதீர்கள்!
அத்திப்பட்டி அல்ல! அலங்காரப்பட்டி!
No comments:
Post a Comment