Friday 25 January 2019

மலை ஏறுவாரா மனோகரன்...?

கேமரன்மலை இடைத் தேர்தல் இன்று  26-ம் தேதி சனிக்கழமை நடைபெறுகிறது.

மக்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப் படுகின்ற ஓர் இடைத்தேர்தல். அனைத்துத் தலைவர்களும் களம் இறங்கியிருக்கிறார்கள். பக்கத்தான் தலைவர்கள் அனைவரும் லிம் கிட் சீயாங், டாக்டர் மகாதிர் உட்பட இன்னும் பிற தலைவர்களும் மலை ஏறியிருக்கிறார்கள்! முன்னாள் பிரதமர் நஜிப் அவருடைய அரசியல் எதிர்காலம் இந்தத் தேர்தலில்  தான் அடங்கியிருப்பதாக நம்புகிறார்!

கேமரன்மலை எல்லாக் காலங்களிலும் பாரிசானின் கோட்டை எனச் சொல்லலாம்.  இன்னும் சொல்லப் போனால் அது ம.இ.கா. வின் பாரம்பரியம் மிக்க ஒரு தொகுதி.  ஆனால் இம்முறை ம.இ.கா. தனது  பாதுகாப்பான தொகுதியை இழந்து விட்டது. பெரும்பாலும் மலாய்க்காரர்கள்-பூர்வக்குடியினர் யாரை ஆதரிக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவார்கள் என நம்பப்படுகிறது.

பொதுவாக பகாங் மாநிலம் பாரிசான் ஆட்சியில் இன்னும் இருக்கிறது. நஜிப் பகாங் மாநிலத்தைச் சேர்ந்தவர். அதனால் தனது மாநிலத்திற்குள்  பக்கத்தான் கட்சி உள் நுழைவதை விரும்பமாட்டார்.  அப்படி பக்கத்தான்  வெற்றி பெற்றால் அந்த இரும்புக்  கோட்டை தகர்ந்து விட்டது என்பதற்கான அறிகுறி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இப்போது, அதாவது 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பல மாநிலங்களில் மட்டும் அல்ல மத்தியிலும் பக்கத்தான் அரசாங்கம் ஆட்சி நடத்துகிறது என்பது நமக்குத் தெரியும். அப்படியென்றால் பகாங் மாநில மக்கள் மத்தியில் பக்கத்தான் அரசாங்கத்தைப் பற்றியான கணிப்பு எப்படி இருக்கும்?  இப்போது கேமரன்மலை மக்களின் மனநிலை எப்படி இருக்கும்?

மலாய்க்கார வாக்களரிடையே அம்னோவும், பாஸ் கட்சியும் தான் இன்னும் மனத்தில் இடம் பிடித்த கட்சிகள் என்பதற்கு எந்த ஆதாராமும் இல்லை! இப்போது பக்கத்தான் கட்சிகளும் மலாய்க்காரரிடையே ஊடுருவல் செய்திருக்கின்றன என்பதையும் மறக்கக் கூடாது.

இன்னொன்று அங்குள்ள பூர்வக்குடி மக்களை யாரும் இதுவரை கண்டு கொள்ளவில்லை. இதற்கு முன்னர் அவர்களுக்குப் பணம் கொடுத்துத் தான் ம.இ.கா. வெற்றி பெற்று வந்தது! பூர்வக்குடியினர் அவர்களது வாழ்வாதாரத்திற்காக பல போராட்டங்களை நடத்தி வந்திருக்கின்றனர். அவர்களுக்கு அறுபது ஆண்டுகளுக்கு மேலாக எந்த நியாயமும் கிடைக்கவில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆக, இந்தத் தேர்தலில் என்ன நடக்கும்?  மலாய்க்காரரிடையே பிளவு, பூர்வக்குடியினரின் முழு ஆதரவு,  இந்திய, சீனரிடையே மகத்தான ஆதரவு - இது போதும் பக்கத்தான் வெற்றி பெற!

மனோகரன் மலை ஏறுவாரா? நிச்சயம் ஏறுவார்!

No comments:

Post a Comment