ஓடி ஒளியாதீர்கள் ஓய்.பி.! என்று தான் நாம் சொல்ல வேண்டியிருக்கிறது!
ஆமாம்! ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஓடி ஒளிகின்றார் என்றால் அவர் மீது மக்களுக்குச் சந்தேகம் வரத்தான் செய்யும். அவர் யார்? கெடா, புக்கிட் செலம்பாவ் பி.கே.ஆர். சட்டமன்ற உறுப்பினர் சண்முகம் ரெங்கசாமி. இவர் தொகுதியில் தான் கடந்த சில நாட்களாக இந்தியர்கள் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது. கம்போங் சுங்கை கித்தா 2 என்கிற அந்த சிறிய கிராமத்தில் சுமார் 70 பேர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு மின்சார வசதி இல்லை அத்தோடு குடிநீர் வசதியும் இல்லை.
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் சொந்த நிலத்தில் இருந்து கொண்டு எந்த வித வசதியும் இன்றி வாழுகின்ற மக்கள் இவர்கள். இவர்கள் தங்களது சொந்த நிலம் என்றாலும் இன்னொருவர் இவர்களின் நிலங்களுக்குச் சொந்தம் கொண்டாடுகிறார்! அது தான் இவர்களின் சோகம்.
கடந்த காலத்தில் அரசாங்கம் இவர்களைக் கண்டு கொள்ளவில்லை! இவர்களின் வாக்குகளை மட்டுமே கண்டு கொண்டனர்! இந்த முறை அவர்கள் பி.கே.ஆர். கட்சிக்கு வாக்களித்து தங்களுக்கு விடிவு காலம் வராதா என்று காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் பி.கே.ஆர். சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் சண்முகம் வெற்றிபெற்ற பிறகு அவர்கள் பக்கமே எட்டிப் பார்க்க வில்லையாம்!
இது நமக்கு ம.இ.கா. வினரை நினைவூட்டுகிறதே! இல்லை! இல்லை! இது நமது பக்காத்தான் அரசாங்கம் தான்! இது அவருக்குத் தெரிந்த பிரச்சனையாகத்தான் இருக்க வேண்டும். தெரியாது என்று சொல்ல முடியாது! ஆனால் அவர் ஓடி ஒளிவது தான் நமக்குச் சந்தேகத்தைக் கிளப்புகிறது. இது போன்ற பிரச்சனைகள் வரும் போது நாம் என்ன சொல்லுவோம்? "காச வாங்கிட்டான்'பா!" என்று சர்வ சாதாரணமாக சொல்லுகின்ற பழக்கம் நம்மிடையே உள்ளது!
சரி! என்ன தான் செய்யலாம்? இந்தப் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். ஓடி ஒளிவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை! பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டும். பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தியுடன் சேர்ந்து சட்டமன்ற உறுப்பினர் சண்முகமும் இணைந்து இதற்கு ஒரு முடிவு காண வேண்டும்.
ஏழை எளிவர்களை ஏமாற்றுவது எளிது. நாடெங்களிலும் இப்படித்தான் இந்தியர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்! இதற்குச் சரியான முறையில் ஆராய்ந்து ஒரு தீர்வு காண வேண்டும். இன்னும் பிரச்சனையை இழுத்துக் கொண்டு போகக் கூடாது.
நல்லதொரு முடிவை இந்த மக்களுக்குக் கொண்டு வர வேண்டும். ஓடி ஒளியாதீர்கள் என்பதே நமது வேண்டுகோள்!
No comments:
Post a Comment