Monday 28 January 2019

பாஸ் - அம்னோ ஒன்று சேருமா..?

பாஸ் - அம்னோ இரு மலாய்க் கட்சிகளும் கேமரன்மலை இடைத் தேர்தலில் ஒன்று சேர்ந்தது மூலம் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பித்திருக்கிறது என்று சொல்லலாம். தோல்வி அடைந்திருந்தால் அது பற்றி பேசாமலே இருந்திருப்பார்கள். ஆனால் வெற்றி ஆயிற்றே!

இந்த இரு கட்சிகளும் சேர்ந்ததில் கிடைத்த கேமரன்மலை வெற்றி அடுத்து வரும் செமன்யி இடைத் தேர்தலிலும் ஒன்று சேர வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது எனலாம். இரு கட்சிகளும் ஒன்று சேராவிட்டால் தொடர்ந்து தோல்விகளைத் தான் எதிர்க்கொள்ள நேரும் என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர். 

ஆனால் இந்த ஒன்று சேர்வது என்பது தேர்தல் காலங்களில் மட்டுமே நடக்கக் கூட்டியது.  அதுவும் குறிப்பாக இடைத் தேர்தல்களில் மட்டும் தான். பொதுத் தேர்தல் என்று வரும் போது   இவர்களால் ஒன்று சேர முடியுமா என்பது கேள்விக் குறியே!

இரு கட்சிகளும் வெவ்வேறு பாதை.  வெவ்வேறு கொள்கை.பாஸ் கட்சியினருக்கு அவர்களை விட்டால் இஸ்லாம் பேர் முடியாது என்று நினைக்கிறார்கள்! அம்னோ அவர்களை விட்டால் மலாய்க்காரர்களுக்கு வேறு போக்கிடம் இல்லை என்று நினைக்கிறார்கள்! அத்தோடு அம்னோவுக்கு "தொட்டுக்க தொடைச்சிக்க"  இஸ்லாம் தேவைப்படுகிறது! அது மட்டுமல்லாமல் ஆட்சி அமைக்க வேண்டுமென்றால் ம.இ.கா., ம.சீ.ச. கூட்டணி தேவைப்படுகிறது. ஆக அம்னோ தன்னை ஒரு பல்லின கட்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறது.  பாஸ் கட்சியின் கொள்கை வேறு. 

பாஸ் கட்சி அம்னோவுடன் ஒன்று சேர்ந்தால் மலாய்க்காரர்களின் பலம் அதிகமாகும். மற்ற இனத்தவர்களை அடக்கி ஆள முடியும் என்கிறது பாஸ். சரி எப்படி ஒன்று சேர்ப்பது? பாஸ் கட்சியுடன் அம்னோ ஒன்று சேருமா அல்லது அம்னோவுடன் பாஸ் ஒன்று சேருமா? அது நடப்பது இயலாத காரியம்.  அம்னோவை விட பாஸ் கட்சியிடம் மிகப்பற்றுள்ள மலாய் வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் லேசில் அசைந்து கொடுக்க மாட்டார்கள்!  அம்னோ நிலை வேறு. அவர்கள் மலாய்க்கரர்களை ஊட்டி ஊட்டியே வளர்த்தவர்கள். கொடுத்து கொடுத்து வளர்த்தவர்கள்! கெடுத்து கெடுத்து வளர்க்கப்பட்டவர்கள்! எந்த நேரத்திலும் அவர்கள் கோபித்துக் கொள்ளலாம்! தடம் மாறலாம்!

இரண்டு கட்சிகளும் ஒன்று சேர பல முயற்சிகள் நடந்தன. அத்தனையும் தோல்வியில் முடிந்தன. பாஸ் கட்சியின் முன்னால் தலைவர் நிக் அசிஸ் அம்னோவை நம்பி பல முறை அம்னோவால் ஏமாற்றப்பட்டவர். அதனால் அவர் கடைசி காலம் வரை அம்னோவை நம்பாலே மறைந்தார்.

இரு கட்சிகளும் ஒன்று சேர வாய்ப்பில்லை.  இடைத் தேர்தலில் கூட்டு சேரலாம். அதுவும் அந்தக் கூட்டு எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்று சொல்ல முடியாது.  காரணம் நீயா, நானா என்கிற பிரச்சனை வரும் போது அனைத்தும் அடிபட்டுப் போகும்.

வெவ்வேறு கொள்கைகளைக் கொண்ட  கட்சிகளை ஒன்று சேர்ப்பது என்பது இயலாத காரியம்.

பொறுத்திருப்போம்! அரசியலில் எதுவும் நடக்கலாம்!

No comments:

Post a Comment