ஒரு வயதானப் பெண்மணி. பூந்தோட்டம் வைத்து பிழைப்பு நடத்தியவர். அவருடைய தோட்டத்தையே ஒன்றுமில்லாமல் நாசமாக்கி விட்டனர். பூக்களை வைத்து பிழைப்பு நடத்துவது சாதாரண விஷயமல்ல.
பூக்கள் குழைந்தைகள் மாதிரி. அதனை நாசம் செய்வது என்பது - என்ன தான் அவன் தனது கடமையைச் செய்கின்றான் என்றாலும் - கொடூரமான மனம் படைத்தவன் என்பதிலே சந்தேகமில்லை. அந்த சட்டமன்ற உறுப்பினர், நில அலுவலக அதிகாரி இவர்கள் கொடூரமானவர்கள். பூக்களைக் கொலை செய்பவர்களை என்னவென்று அழைக்கலாம்?
காலி செய்த பின்னர் இந்த நிலத்தை இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். இலஞ்சம் வாங்கிக் கொண்டு நில மேம்பாட்டளர்களுக்கு விற்று விடுவார்களா? இல்லாவிட்டால் இந்த அவசரம் தேவை இல்லை! இதன் பின்னணி ஆராயப்பட வேண்டும். அது ஜ.செ.க. வேலை. இதுவே ஒரு மலாய்ப் பெண்மணியாக இருந்தால் இப்படி அலட்சியமாக நடந்து கொள்வாரா? அல்லது அந்த அதிகாரிதான் அப்படி நடந்து கொள்வாரா?
ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு என்ன வேலை? தனது ஆளுகைக்கு உட்பட்ட மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க வேண்டும். ஆனால் இவர் தீர்த்து வைப்பார் என்பதற்கான ஆளில்லை. அடுத்த தேர்தல் வரை நீடிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அதிகாரிகளைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை. அவர்கள் இன்னும் தாங்கள் பாரிசான் அரசாங்கத்திற்கு வேலை செய்வதாகவே நினைக்கின்றனர். அவர்கள் நிலை மாறும். அப்படியே தொடர்ந்து கொண்டு இருக்க முடியாது.
சரி எல்லாம் முடிந்து விட்டது. பெரும் முயற்சி எடுத்து புதிய நிலம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது எத்தனை நாளைக்கு என்று ஏதாவது ஒரு வரையறைக் கொடுக்கப்பட்டிருக்கிறதா? அதைவிட முக்கியம் அந்த நிலத்திற்கு அந்த அம்மையாரின் பெயரில் பதிவு செய்ய முடியுமா? அது தான் முக்கியம். நாளை ஒருவன் வருவான். நன்றாகச் செழித்து வளர்ந்திருக்கும் பூச்செடிகளைப் பார்த்ததும் அவன் கண் உறுத்தும். உடனே அவன் வாங்க நினைப்பான். வீடுகள் கட்டினால் நல்ல இலாபம் தரும் என்று முடிவு கட்டுவான்! இது தான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது!
அந்த வயதான அம்மாள் தனது பழைய நிலத்தில் ஏகப்பட்ட பணம் செலவு செய்திருக்கிறார். இந்தப் புதிய நிலத்திலும் அவர் ஏகப்பட்ட செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கும். அதற்கான செலுவுகளைச் சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர் இருவரும் அவருக்குக் கொடுக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
எல்லாவற்றுக்கும் மேலாக அந்த நிலத்தை அவரின் பெயருக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். முடியும்!
No comments:
Post a Comment