கல்வி அமைச்சர், மஸ்லி மாலேக் என்ன சொல்ல வருகிறார்?
இந்திய மாணவர்கள் மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்புக்களை முந்தைய அரசாங்கத்தில் என்ன கொடுக்கப்பட்டதோ அதனையே கொடுக்க வேண்டும் என்பது தான் நமது கோரிக்கை. அப்படிக் கொடுத்த போது பூமிபுத்ராக்களுக்கு எந்தப் பாதிப்பும் சென்ற ஆண்டு ஏற்படவில்லை என்பதை அமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆனால் இந்த ஆண்டு பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு இடங்களை அதிகரிக்கிறோம் என்னும் பெயரில் முன்பை விட பூமிபுத்ரா மாணவர்களுக்கான இடங்கள் வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கின்றன! ஆனால் இந்திய மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்டதோ சென்ற ஆண்டு கொடுக்கப்பட்ட அதே எண்ணிக்கை தான்! ஆக, இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கூட்டப்படவில்லை. உண்மையில் மலாய் மாணவர்களின் எண்ணிக்கை தான் கூட்டப்பட்டிருக்கிறது!
இந்த நேரத்தில் மஸ்லில் கூறி இருக்கும் ஒரு கருத்து நம்மை சிந்திக்க வைக்கிறது. வேலை வாய்ப்புக்களில் பூமிபுத்ராக்கள், அதுவும் தனியார் நிறுவனங்களில், ஒதுக்கப்படுகின்றனர் என்கிற கூற்று நம்மை அதிர்ச்சி அடைய வைக்கிறது!
அமைச்சர் தெரிந்து பேசுகிறாரா அல்லது தெரியாமல் பேசுகிறாரா என்று நமக்குப் புரியவில்லை. அல்லது கீழ்த்தட்டு நிலவரம் அவருக்குத் தெரியுமா தெரியாதா என்று நாம் யோசிக்க வேண்டியுள்ளது.
அரசாங்கத் துறையில் அனைத்தும் பூமிபுத்ராக்களுக்கே. அதில் எந்த மாற்றமும் இல்லை. காவல்துறை, இராணுவம், கப்பற்படை என்று எடுத்துக் கொண்டால் அனைத்தும் பூமிபுத்ராக்களுக்கே.
சரி தனியார் துறை என்றால் அங்கும் ஏறக்குறைய ஒரு கோட்டா முறை உருவாக்கப்பட்டிருக்கிறது. பூமிபுத்ராக்களுக்கே முதல் சலுகை.
இப்போது அவர் தான் பதில் சொல்ல வேண்டும். இந்தியர்கள் எல்லாத் துறைகளிலும் புறக்கணிக்கப்படுகிறார்கள். அரசாங்கத் துறையாக இருந்தாலும் சரி அல்லது தனியார் துறையாக இருந்தாலும் சரி இந்தியர்கள் தான் வேண்டப்படாதவர்கள் என்கிற நிலை நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
பூமிபுத்ராக்களின் மேல் அக்கறை காட்டுவது என்பது தவறல்ல. இன்னும் அவர்களை ஏழைகளின் பட்டியலில் தொடர்ந்து கொண்டே இருப்பது சரியானதாகத் தெரியவில்லை. அப்படி என்றால் இந்தியர்களின் நிலை என்ன? எல்லாத் துறைகளிலும் புறக்கணிக்கப்படும் இந்தியர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
மஸ்லி மாலேக் பேசும் போது கொஞ்சம் யோசிக்க வேண்டும். அனைத்து குடிமக்களின் நலன் என்பது முக்கியம். ஒரு சாரார் தூக்கப்படுவதும் இன்னொரு சாரார் தாழ்த்தப்படுவதும் எதிர்கால மலேசியாவுக்கு நல்லதல்ல!
No comments:
Post a Comment