Saturday 11 May 2019

தேசிய விமானத்தின் எதிர்காலம்...?

நமது தேசிய விமானமான "மாஸ்" நிலை என்ன? 

மிகவும் இக்கட்டான நிலை என்பதில் ஐயமில்லை.  அது ஒரு வெள்ளை யானை. அதனைக் கட்டி மேய்ப்பது சிரமம் என்னும் நிலைக்கு அது தள்ளப்பட்டு விட்டது.

அதனை விற்றுவிடுவது   நல்லது என்கிறார் பிரதமர் மகாதிர். அது நாட்டின் மாபெரும் சின்னம். அதனை விற்பது நாட்டின் கௌரவத்திற்கு இழுக்கு என்கின்றனர் சிலர்.

அதனை விற்கலாம். தனியார் துறைக்கு விற்கலாம். ஆனால் அது தொடர்ந்து மலேசிய விமானமாகவே தனது பயணத்தைத் தொடர வேண்டும் என்னும் சொல்வாரும் உண்டு.

இந்த கருத்தை நான் ஆதரிக்கிறேன். அது தனியார் துறையினரால் நடத்தப்படுவதில் நமக்கு ஆட்சேபணையில்லை.  மலேசியாவில் உள்ள எத்தனையோ பேர் அதனை நடத்த தயராக உள்ளனர்.  அவர்கள் அதனை மலேசிய விமானமாகவே நடத்த தயாராக இருப்பர் என நம்பலாம்.

நட்டத்தில் ஓடும் ஒரு விமானத்தை யார் வாங்குவார் என்னும் பேச்சுக்கே இடமில்லை. மாபெரும் கடனில்  மூழ்கியிருந்த "ஏர் ஏசியா" விமானத்தை 0 விலைக்கு வாங்கி அதனை வெற்றிகரமான நிறுவனமான மாற்றி அமைத்தவர்கள் நம் கண் முன்னே இருக்கிறார்கள்.  அதனால் வாங்க ஆளில்லை; நடத்த ஆளில்லை என்பதெல்லாம் வெறும் பேச்சு. வாங்க ஆளில்லை என்று சொல்லப்பட்ட "இக்குவானிமிட்டி" கப்பலை கெந்திங் நிறுவனம் வாங்க வில்லையா? 

கொஞ்சம் பின் நோக்கிச் செல்வோம். மாஸ் விமான நிறுவனம் ஆரம்பித்த போது மிகவும் ஆரவாரமாக ஆராம்பிக்கப்பட்டது. அது மட்டும் அல்ல. அப்போது அது இலாபகரமான ஒரு நிறுவனமாக செயல்பட்டது என்பதையும் மறக்க இயலாது. இலாபகரமாக செயல்பட்ட ஒரு நிறுவனத்தை எப்போது அரசியல்வாதிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்களோ அப்போது இருந்தே அதன் செயல்பாடுகள் கீழ் நோக்கிச் செல்ல ஆரம்பித்தன. 

அதனைத் தவறாக வழி நடத்தியவர்கள் எல்லாம் இன்றும் வெட்கமில்லாமல் கோடிசுவரர்களாக ஊர்வலம்  வந்து கொண்டு இருக்கிறார்கள்! விமான நிறுவனமோ பொலிவிழந்து, களையிழந்து  கட்டவிழ்ந்து கிடக்கிறது! "இனி எங்களால் முடியாது!" என்று விமானத்தை வைத்து அரசியல் நடத்தியவர்கள் இப்போது மௌன ஊர்வலம் வருகிறார்கள்!

மாஸ் விமானத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்? சிறப்பாகவே இருக்கும்.  அந்த நிறுவனம் தொழில் செய்பவர்கள் கையில் இருந்தால் அதனை நொடிப் பொழுதில் மாற்றி அமைத்து  விடுவார்கள்.  அரசியல்வாதிகள் கையில் இருந்தால் நொடிப் பொழுதில்  நட்டத்தை ஏற்படுத்துவார்கள்! அரசியல்வாதி அவன் வேலையை மட்டும் செய்ய வேண்டும். தொழிலதிபனாக மாற கனவிலும் நினைக்கக் கூடாது!

இனி இந்ததேசிய விமான நிறுவனத்தை தொழில் அதிபர்கள் தான் நடத்துவார்கள் என்பதை  மகிழ்வுடன் வர வேற்கிறோம்!

No comments:

Post a Comment