Tuesday 7 May 2019

தமிழ் மொழிக் காப்பகம்

எத்தனையோ  ஆண்டுகள் நமது தொடர்புகள் தேவான் பகாசா டான் புஸ்தக்காவுடன் இருந்தாலும்  தமிழ் மொழியை அவர்களும் கண்டு கொள்ளவில்லை.  நாமும் கண்டு கொள்ளவில்லை.

ஆனால் சீனர்கள் கமுக்காகவே அனைத்தும் செய்து வந்தனர். செய்து கொண்டும் விட்டனர்! அதுவும் 15 ஆண்டுகளுக்கு முன்னராம்!  நம்மால் செய்ய முடியவில்லை. முந்தைய அரசாங்கத்தில் நமது இனததவர் துணைக் கல்வி அமைச்சராக இருந்தும் அவரும் தனது நிலையைத் தற்காத்துக் கொள்ள வேண்டி இந்த முயற்சியில் ஈடுபடவில்லை! அவருக்கு அவரது பதவி தான் முக்கியம். இருக்கட்டும்! 

இப்போது தமிழ் மொழிக்கு ஓர் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அதுவும் ஒரு சீனத் துணைக் கல்வி அமைச்சர் மூலம்!  துணைக்கல்வி அமைச்சர் தீயோ நீ சிங் இந்தக் காப்பகத்தின் தலைவராக இருக்கிறார். வரவேற்கிறோம்! 

ஏன் ஒரு தமிழர் தலைவராக இருக்க முடியாதா என்கிற கேள்விக்கு இடமில்லை. ஏற்கனவே  துணைக்கல்வி அமைச்சர் டத்தோ கமலநாதன் இந்தப் பதவி வேண்டாம் என்று தூக்கி எறிந்தவர். அவர் மொழியை மதிக்காதவர். அதனால் இப்போதைய அமைச்சர் தீயோ நீ சிங் தலைவராக இருப்பதில் நமக்கு ஒன்றும் ஆட்சேபணையில்லை. ஆனால் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது:  தமிழ் மொழிக் காப்பகத்தின் துணைத் தலைவராக இருப்பவர் முன்னாள் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ தெய்வீகன் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. அவர் காவல் தெய்வமாக இருந்து தமிழ் மொழியைக் காவல் காப்பார் என்பதில் ஐயமில்லை.  இன்னும் பல தமிழ் கல்விமான்கள் இந்தக் காப்பகத்தில் இடம் பெற்றிருக்கின்றனர்.  மன்னர் மன்னன்  போன்றவர்கள் இருக்கும் வரை தமிழ்க் காப்பகம் சரியான பாதையில் செல்லும் என நம்பலாம்.

கல்வி அமைச்சின் கீழ் இயங்கப் போகும் இந்தக் காப்பகத்தின் மூலம்  நாம் என்ன எதிர்ப்பார்க்கலாம்?  ஒன்று மொழி வளர்ச்சி,  கலைச் சொற்கள் உருவாக்கம்,  மொழியாக்கம், மலாய் மொழியிலிருந்து தமிழ், தமிழிலிருந்து மலாய் என்று சொல்லலாம். நமது படைப்புக்கள் அங்கே, அவர்களது படைப்புக்கள் இங்கே என்று நீண்டுக் கொண்டே போகும்.

மொழிக் காப்பகம் என்பது தமிழ் மொழிக்கு ஒரு பொற்காலம்.  அதனை  சரிவர பயன்படுத்திக் கொள்ளுவது நமது கையில்! அதனை வழி நடத்துபவர்கள் சரியான வழியில் அதனைக் கொண்டு செல்ல வேண்டும் என்பது நமது வேண்டுகோள்.

இருநூற்று இரண்டு  ஆண்டு காலம் மலேசிய மண்ணில் வலம் வரும் நமது செம்மொழியான தமிழுக்கு ஒரு காப்பகம், தமிழ் மொழிக் காப்பகம்.

வாழ்த்துவோம்! வணங்குவோம்! நமது தாய் மொழியை!

No comments:

Post a Comment