சாலைகளின் பெயர்கள் மாற்றப்படுவது என்பது தேவையான போது நடைபெறைகின்ற ஒரு மாற்றம் தான்.
ஆனால் பிரிக்பீல்ஸில் உள்ள ஜாலான் துன் சம்பந்தன் பெயர் மாற்றம் என்பது சரியான முடிவு அல்ல என்பதுதான் பொதுவாக இந்தியர்களின் எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும்.
ம.இ.கா.வின் மேல் நமக்கு ஆயிரம் கோபதாபங்கள் இருக்கலாம். ஆனால் அந்த கோபங்களுக்கும் துன் சம்பந்தனுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.
உண்மையைச் சொன்னால் துன் சம்பந்தன் காலத்தில் தான் பற்பல நல்ல காரியங்கள் இந்தியர்களுக்கு நடந்திருக்கின்றன. ஏன் இந்தியர்களின் பொருளாதாரத்தையே எடுத்துக் கொள்ளுவோம். இன்று மலேசிய இந்தியர்களின் பொருளாதாரம் ஒன்று/ஒன்றரை விழுக்காடு தான் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதில் முக்கிய பங்கு வகிப்பது தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் தான். அதனை தோற்றுவித்தவர் துன் சம்பந்தன். அந்த கூட்டுறவு சங்கம் இல்லை என்றால் நமது விழுக்காடு அரை விழுக்காடு என்கிற நிலையில் தான் இருக்கும்!
துன் சம்பந்தன் மாபெரும் தலைவர். நாடு சுதந்திரம் பெற்ற போது இருந்த தலைவர்களில் அவரும் ஒருவர். அவரது பெய்ரை அநாவசியமாக அகற்ற பரிந்துரை செய்வது மிகவும் கீழ்த்தரமான அரசியல்.
ம.இ.கா.வை இந்தியர்கள் புறக்கணிக்கிறார்கள் என்பது உண்மையிலும் உண்மை. ஆனால் அது துன் சம்பந்தனால் அல்ல. அந்த புறக்கணிப்பு என்பது எப்போது சாமிவேலு ம.இ.கா. வின் தலைவராக வந்தாரோ அன்றிலிருந்து தான் அதன் அழிவின் ஆரம்பம்.
இது போன்ற பரிந்துரைகள் எல்லாம் இஸ்லாமிய விவகார அமைச்சர் போன்றவர்களிடமிருந்து வருவது ஏற்புடையது அல்ல. அவர் இந்தியர்கள் ம.இ.கா. வின் மீது காட்டுகின்ற வெறுப்பை மட்டுமே கவனிக்கிறார். ஒன்று மட்டும் புரிகிறது. அவர் துன் சம்பந்தன் என்பவர் யார், அவருடைய வரலாறு என்ன, இந்தியர்கள் அவரால் அடைந்த பயன்கள் என்ன என்பதையெல்லாம் ஆராயாமல் இப்படி ஒரு பரிந்துரையைச் செய்திருக்கிறார்.
பக்காத்தான் அரசில் உள்ள இந்தியத் தலைவர்களுக்கு ஒருகோரிக்கை வைக்கிறேன். நம்மிடையே ஆயிரம் வித்தியாசங்கள் இருக்கலாம். நீங்கள் மட்டும் அல்ல நாங்களும் ம.இ.கா. வை வெறுக்கிறோம். ஆனால் இன்றைய ம.இ.கா. வேறு. அன்றைய சம்பந்தன் வேறு. அதனால் தேவை இல்லாமல் பெயரை மாற்றுகிறோம் என்று கூறுவதை நமது தலைவர்கள் ஆதரிக்கக் கூடாது என்பதை உங்கள் பார்வைக்குக் கொண்டு வருகிறோம்.
இது போன்ற பரிந்துரைகளை முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். அவர்களை அடக்கி வைக்க வேண்டும். முன்னாள் தலைவர்களின் பெயர்கள் இருந்தது போலவே இருக்கட்டும். அதில் கை வைக்கக் கூடாது என்பதே நமது கோரிக்கை.
பக்காத்தான் அரசிலிருந்து நாம் கேட்பது எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் இருப்பதையும் எடுக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது. நமது தலைவர்கள் வெளியே வீரத்தைக் காட்ட முடியாவிட்டாலும் உள்ளுக்குள்ளேயே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
பெயர் மாற்றம் வேண்டாம்!
No comments:
Post a Comment