Thursday 2 May 2019

வயசு என்னா வயசு...!

ஒரு சில பெரியவர்கள் செய்கின்ற சாதனைகளைப் பார்க்கும் போது :வயசு என்னா வயசு!" என்று சொல்லத் தோன்றுகிறது!

நமது பிரதமர் டாக்டர் மகாதிரையே  எடுத்துக் கொள்ளுங்கள். இந்த 94 வயதில்  இரண்டாவது முறையாக  பிரதமர் பதவி ஏற்றிருப்பது என்பது நம்மைப் பொறுத்தவரை அதிசயத்திலும் அதிசயம்! 

நம்மிடையே எப்போது 60 வயது ஆகும் "அக்கடா"  என்று ஓய்வு எடுப்போம் என்று நினைப்பவர்கள் அதிகம்! வேலைக்குப் போகும் மலேசியர்கள் பெரும்பாலும் இப்படித்தான் நினைக்கின்றனர்! காரணம் கேட்டால் வேலை பளு, அதனால் ஓய்வு தேவை  என்கின்றனர். " குடும்பத்திற்கு உழைச்சி கொட்டியது போதும்!" என்று புலம்புகின்றனர்!

ஆனால் 94 வயதில் மீண்டும் பிரதமர். மீண்டும் அரசியல் பணி. மீண்டும் ஏச்சு பேச்சுக்கள்! எதைப் பற்றியும் கவலைப்படாமல்  தனது பணிகளைச் செய்கிறார். முன்னாள் பிரதமர் ஏற்படுத்திவிட்டுப் போன சீரழிவுகளைச் சீர்படுத்துகிறார். 

அவர் மட்டுமா? சமீபத்தில் காணொளியில் பார்த்த ஒரு சம்பவம் ஆச்சரியப்படுத்துகிறது. 96 வயது மனிதர் அவர்.  விவசாயி.  இந்த வயதிலும் பனை மரம் ஏறுகிறார்.  காய்களைப்  பறிக்கிறார்.  அவைகளைக் கொண்டு போய் விற்று பணமாக்குகிறார்.  தனது தேவைகளைப் பார்த்துக் கொள்ளுகிறார். பிள்ளைகள் இருந்தும் அவர்களிடம் உதவிக்காகப் போகவில்லை. தானே சம்பாதித்து தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறார்.  வயதைக் கவனியுங்கள். இந்த வயதிலும் மரம் ஏறுவது என்பது சாதாரணமான காரியம் அல்ல. நடப்பதற்கே ஊன்றுகோள் தேவையாய் இருக்கும் காலம் இது! இந்த வயதில் மரம் ஏறுவதா!

அட! இதோ ஒரு பெண்மணி.  கல்வி அறிவை பெறுவதற்கு வயது என்ன தடை என்பார்கள். வயது ஒரு தடையல்ல என்பது உண்மை தான். ஆமாம்! நான் சொல்லுகின்ற பெண்மணிக்கு வயது நூறு ஆகிறது. சிறு வயதில் கல்வி கற்க முடியவில்லை. அதனால் இப்போது தான் கல்வி கற்க காலம் கனிந்திருக்கிறது.   கல்வி கற்க ஆரம்பித்திருக்கிறார். அத்தோடு கணினி பயிலவும் ஆரம்பித்திருக்கிறார்!  இனி மேல் படித்து ...... என்ன ஆகப் போகிறது என்று சொல்லுபவர்கள் நம்மைப் போன்ற சராசரி மனிதர்கள்! அவர்கள் சாதனையாளர்கள். அது தான் வித்தியாசம்.

இந்த நேரத்தில் இன்னொன்றும் ஞாபகத்திற்கு வருகிறது. தத்துவ மேதை சாக்கிரட்டிஸ்  தூக்கு மேடைக்காகக் காத்திருக்கிறார், பக்கத்து அறையில் இருந்த ஒரு கைதி ஏதோ ஒரு இசைக் கருவியை வைத்து இசைத்துக் கொண்டிருக்கிறார்.  சாக்கிரட்டிஸ் அதுவரை அது போன்ற இசையைக் கேட்டதில்லை. அந்த நண்பரைக் கூப்பிடுகிறார். தனக்கு அந்த இசையைக் கற்றுக் கொடுக்க முடியுமா என்கிறார் சாக்கிரட்டிஸ். "நாளை தூக்கு மேடை ஏறப்போகும் உமக்கு எதற்கு இந்த ஆசை?" என்கிறார் நண்பர். அதற்கு  "சாகும் போது புதிதாக ஒன்றைக் கற்றுக் கொண்ட திருப்தி ஒன்றே போதாதா!"  என்கிறார் சாக்கிரட்டிஸ்!

அது தான்.  மனிதன் இருக்கும் வரை, இறக்கும் வரை, ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும். அரசியல் பண்ணுபவர் அரசியல் பண்ணட்டும்.  மரம் ஏறுபவர் ஏறிக் கொண்டே இருக்கட்டும்.  கற்றுக் கொள்ள நினைப்பவர் கற்றுக் கொண்டே இருக்கட்டும்.  புதிய புதிய முயற்சிகளில் ஈடுபடுவோர் ஈடுபட்டுக் கொண்டே இருக்கட்டும். 

இது தான் வாழ்க்கை! இது தான் பயணம்! அப்புறம் என்னா வயசு? அதில் ஏற்றத் தாழ்வு என்று ஒன்றுமில்லை!

No comments:

Post a Comment