முகமது ஷாஃபி அப்துல்லா என்ன ஆனார்....!
ஆமாம் அவர் "எஸ்டேட்காரன்" என்றார். நாம் எல்லாம் ஒன்று சேர குரல் கொடுத்தோம். தலைவர்கள் கொடுத்தார்கள். இயக்கங்கள் கொடுத்தன. ஷாஃபியே மன்னிப்புக் கேள் என்றோம். ஊகும் ...! ஒன்றும் ஆகவில்லை..!
அவர் மன்னிப்பு கேட்பதாய் இல்லை. அவர் அதிகாரத்தில் இருந்தவர். மன்னிப்பு கேட்பதவது! அவர் சார்ந்த கட்சியைத் தோற்கடித்தவர்கள் நாம். அந்த வன்மம் அப்படியெல்லாம் சீக்கிரமாகப் போய்விடாது! ஓரு அதிகாரமும் இல்லாத ம.இ.கா. காரனையே நம்மால் மன்னிப்பு கேட்க வைக்க முடியவில்லை! ம.இ.கா. தலைவர், அவர் செய்த பாவங்களுக்காக, எந்தக் காலத்திலாவது இந்திய சமுதாயத்திடம் மன்னிப்பு கேட்டிருக்கிறாரா?
ம.இ.கா. காரனுக்கு அவ்வளவு திமிர் இருந்தால் அம்னோவைச் சார்ந்த ஷாபிக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்? அவரைக் குறை சொல்ல முடியாது. அவர் வாழ்ந்த வாழ்க்கை அப்படி. அவர் வகித்த பதவிகள் அப்படி. பாரிசான் ஆட்சியில் அவர் முடிசூடா மன்னர்! அத்தகைய ஒரு மனிதரைப் போய் "மன்னிப்பு கேள்" என்றால் அது நடக்கக் கூடிய காரியமா, என்ன?
சரி, இப்போது என்ன. நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்! உன்னால் என்ன செய்ய முடியும் என்று இந்திய சமுதாயத்தைப் பார்த்து கேள்வி கேட்கிறார்! ஆமாம் நம்மால் என்ன செய்ய முடியும்? கொஞ்சம் பின் நோக்கிப் பாருங்கள். ஸம்ரி காளிமுத்துவை நம்மால் என்ன செய்ய முடிந்தது? முகமது ரிதுவான் அப்துல்லாவை நம்மால் என்ன செய்ய முடிந்தது? இவர்கள் எல்லாம் சுண்டைக்காய்கள்! இவர்களையே நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்படியிருக்க இதுவோ ஒருவகை கடல் சுறா மாதிரி! என்னா செய்ய முடியும்?
அதிகாரம் அவர் கையில் இருந்திருந்தால் மன்னிப்பு கேட்க சொன்னவர்களை இந்நேரம் உண்டு இல்லை என்று ஆக்கியிருப்பார்! இப்போது அவரிடம் அதிகாரம் இல்லை! இருந்தாலும் முடிந்து போன அதிகாரத் திமிர் இன்னும் அவரிடம் ஒட்டிக் கொண்டிருக்கிறது! நடப்பில் இருக்கிற கணக்கு வழக்குகள் எல்லாம் முடிந்த பின்னர் நிலைமை மாறலாம். அதற்கு இன்னும் காலம் உண்டு. அதுவரையில் அவரிடமுள்ள வீராப்புக்குக் குறைவு இருக்காது!
ஒன்று செய்யலாம். இது போன்ற அடாவடி மனிதர்களுக்காக வேண்டுதல் செய்யலாம். ஆமாம்! வேறு ஒன்றும் செய்ய இயலாத நிலையில் "இறைவா! இவருக்கு நல்ல புத்தியைக் கொடு!" என்று நாம் வேண்டுதல் செய்யலாம். அவர் திருந்துவதறகு நாம் வாய்ப்புக் கொடுக்க வேண்டும்.
யாராலும் செய்ய முடியாத ஒன்றை இறைவனால் தான் செய்ய முடியும். அதுவும் கொஞ்சம் தலை கனத்து இருப்பவர்களுக்கு இது ஒன்று தான் வழி!
என்னா ஆனார்? ஒன்றும் ஆகவில்லை!
No comments:
Post a Comment