பக்காத்தான் அரசு பதவியேற்று ஓர் ஆண்டு நிறைவு அடைந்தது! ஏதோ நேற்று போல் தோன்றுகிறது. அதற்குள் ஓர் ஆண்டு!
இந்த ஓர் ஆண்டில் இந்த அரசு எதனைச் சாதித்தது என்று நீங்களும் நானும் கேட்கத்தான் செய்கிறோம். பலரும் கேட்கின்றனர்.
எல்லாரும் கேட்பதைப் போல் நான் கேட்கப் போவதில்லை. என்னைப் பொறுத்தவரை இந்தியர்கள் தான் எனது இலக்கு. மற்ற இனத்தவர்கள் கேட்க ஒன்றுமில்லை. அது தானாக நடக்கும். ஆனால் நம்மைப் பொறுத்தவரை அது தானாக நடக்காது. கேட்டாலும் கிடைக்கும் என்னும் நம்பிக்கையும் இல்லை. அந்த நம்பிக்கையின்மையை இந்த அரசு ஏற்படுத்திவிட்டது. அதுவும் இந்த ஓர் ஆண்டு காலத்தில்!
கடந்த பொதுத் தேர்தலின் போது நம்மால் அதிகம் கேட்கப்பட்டது என்றால் அது குடியுரிமை பற்ற்யதாகத்தான் இருக்கும். ஒரு சில மாதங்களில் இதற்கு முடிவு கிடைக்கும் என்று நமக்குக் கிடைத்த தகவல்கள் பிறகு பொய்யாக்கப்பட்டு விட்டன!
குடியுரிமை அற்றவர்கள் சுமார்3,00,000 பேர் என்றார்கள். அதாவது இந்தியர்கள் மட்டும்! அனைவரும் இங்கு இந்த மண்ணில் பிறந்தவர்கள். ஆனால் எதிர்ப்பார்த்தபடி ஒன்றும் நடக்கவில்லை! நடந்தது என்ன? இவர்கள் பதவிக்கு வந்த ஒராண்டில் 1641 பேர் குடியுரிமை கொடுக்கப்பட்டிருப்பது மாபெரும் வெற்றி என்கிறார் உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகைதீன்! குடியுரிமை பெற்றவர்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்!
அந்த எதிர்ப்பார்ப்பு "பக்பக்", "காத்தான் காத்தான்", என்று எகத்தாளமாகப் போய்விட்டது!
சரி கல்வியை எடுத்துக் கொள்ளுவோம். பாரிசான் ஆட்சியில் இந்திய மாணவர்கள் மெட்ரிகுலேஷன் கல்வி பயில 2200 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதனை 700 ஆக்கிய பெருமை பக்காத்தான் ஆட்சிக்கு உண்டு. இது என்ன ஓராண்டு சாதனையா? கூடுதலாக கொடுக்கப்படும் என்பதில் எந்த உறுதியும் இல்லை!
வேலை வாய்ப்புக்கள் என்பது பற்றி சரியான தீர்வுகள் காணப்படவில்லை. அரசாங்க வேலை எதுவும் இந்தியர்களுக்குக் கொடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. தனியார் துறையிலும் நமக்கான பங்கு நமக்குக் கிடைக்கவில்லை. வங்கிகள், பெரும் நிறுவனங்கள் இன்னும் நமக்குக் கைக்கொடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை!
இன்னும் பல பிரச்சனைகள் நமக்கு உண்டு. அதனை இங்கு நான் கொண்டு வரவில்லை. இது முதலாம் ஆண்டு என்பதால் நம்மால் அதிக அழுத்தம் கொடுக்க முடியவில்லை. பொருளாதார சீர்திருத்தத்திலேயே அரசாங்கம் அதிகக் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இன்னும் இருப்பதால் நாமும் கொஞ்சம் விட்டுக் கொடுப்போம்.
இந்த ஓர் ஆண்டு காலத்தில் பக்கத்தான் ஆட்சிக்கு எத்தனை புள்ளிகள் கொடுக்கலாம்? நாம் இந்தியர்களிப் பற்றித் தான் பேசுகிறோம். அதனால் நூறுக்கு இருபது புள்ளிகள் கொடுக்கலாம்! கிள்ளி கொடுப்பவர்களுக்கு அள்ளி கொடுக்க முடியாது!
No comments:
Post a Comment