Thursday 9 May 2019

அது என்ன "எஸ்டேட் புத்தி?"

முன்னாள் பிரதமர் நஜிப்பின் வழக்கறிஞர் முகமது ஷாஃபி அப்துல்லா நீதிமன்றத்தில் பத்திரிக்கையாளர்களைப் பார்த்து சீறியிருக்கிறார்! "ஏன் எஸ்டேட்காரன் போல் நடந்து கொள்ளுகிறீர்கள்?"  என்று அவர் சொன்ன வார்த்தை பத்திரிக்கையாளர்களைச் சீற்றம் அடையச் செய்திருக்கிறது!

நாம் நினைத்துப் பார்க்கும் போது ஒன்று நமக்கு ஞாபகத்திற்கு வருகிறது. நாமும் கூட "இவனுக்குக் கம்பத்துப் புத்தி போகாது!"  என்று சொல்லுவது நமக்கும் வழக்கம் தான்! ஆனால் நாம் அதனை மேடையிலோ அல்லது நீதிமன்றத்திலோ  சொல்லுவது கிடையாது!  அந்த வாய்ப்பு  அவருக்குக் கிடைத்திருக்கிறது, அதனை அவர் பயன் படுத்திக் கொண்டார்! அவ்வளவு தான்!

ஷாஃபி  போன்றவர்கள் என்ன குணாதிசயங்கள் கொண்டவர்கள்  என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  வாழ்க்கையில் பெரும்பாலான பகுதி  அவர்கள் மற்றவர்களின் நனமதிப்பைப் பெற்று வாழ்ந்தவர்கள் அல்ல.  அரசியல் தான் அவர்களைத் தூக்கி விட்டது! மற்றபடி கடுமையாக உழைத்துச் சம்பாதித்தவர்கள் என்பதெல்லாம் அவர்கள் அகராதியில் இல்லை!

"எஸ்டேட் காரன்" என்பதை எந்த அர்த்தத்தில்  அவர் சொன்னார்?.  தோட்டப்புறத்தில் வாழ்ந்த ஒருவன் எந்தக் காலத்திலாவது  ம.இ.கா.வை வைத்து  கோடிக் கணக்கில் பணம்  சம்பாதித்தான்  என்று சொல்ல  முடியுமா?  தோட்டப்புறத்தில் உள்ளவனை வைத்துத் தான் பட்டணத்து அரசியல்வாதி  கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்தான் என்று நமது வரலாறு சொல்லுகிறது!

இதனைத் தான் ஷாஃபி  இடித்துரைப்பது போல் சொல்லுகிறார். எஸ்டேட்காரன் பிழைக்கத் தெரியாதவன்! அரசியலை வைத்து கம்பத்துக்காரன் பிழைத்துக் கொள்ளத் தெரிந்தது போல்  எஸ்டேட் காரனுக்குப் பிழைக்கத் தெரியவில்லை என்கிறார்! 

அதற்கு நாம் என்ன செய்வது?  நமது கல்வி முறையே நம்மை மழுங்கடித்து விடுகிறதோ என்று தோன்றுகிறது. அறம் செய்ய விரும்பு என்று சொன்னார்களே தவிர கொள்ளயடிக்க விரும்பு என்று எஸ்டேட் பள்ளியில் சொல்லிக் கொடுக்கப்பட வி,ல்லையே!

ஷாஃபி சீறியதைப் பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை.  அவர் படித்த படிப்பு, அவர் வளர்ந்த முறை  என்று பின்னோக்கிப் போனால் அவர் அப்படித்தான் பேசுவார் என்று புரிந்து கொள்ளலாம்.

நல்லவன் ஒரு கருத்தைச் சொன்னால் அதன் படி நாமும் நடக்க முயற்சி செய்யலாம். நாரவாயன் ஒரு கருத்துச் சொன்னால் நார வாயா என்று துப்பிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க வேண்டியது தான்!

No comments:

Post a Comment