Tuesday 28 May 2019

இந்திய தொழில் துறைகள் அழிந்து வருகின்றனவா?

இந்தியர்களால் நடத்தப்படுகின்ற  பாரம்பரிய தொழில்கள் அழிந்து வருகின்றனவா அல்லது அழிக்கப்படுகின்றனவா என்கிற ஒரு சந்தேகம் இந்திய வர்த்த சங்ககளின் அறிக்கைகள் நமக்கு ஏற்படுத்துகின்றன!

ஆமாம் அவர்களின் அறிக்கைகள் அப்படித்தான் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. அவர்கள் பக்காத்தான் அரசாங்கத்தைக் குற்றம் சாற்றுகின்றனர். அப்படியென்றால்...? அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்?

"எங்கள் தொழில்களை எங்களிடமிருந்து பறித்துவிட்டு அவைகளை வேறு இனத்தவருக்கு மாற்றம் செய்கின்றனர்"  என்பது தான் அந்தச் செய்தி!  அப்படித் தான் நாம் ஊகிக்க வேண்டியிருக்கிறது.

அதில் உண்மை உண்டா இல்லையா என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் ஒரு சில தொழில்கள் நம்மிடமிருந்து  மற்றவர்களிடம் போய் விட்டன என்பது உண்மை.

சான்றுக்கு ஒன்றைச் சொல்லலாம். முடி வெட்டும் தொழிலை எடுத்துக் கொள்வோம்.  நமது அப்பன் காலங்களில் எப்படி அந்தத் தொழில் செய்யப்பட்டனவோ அதில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே தொடர்ந்து அந்தத் தொழிலை செய்து கொண்டிருந்தனர்!  ஏன் எந்த மாற்றமும் செய்யவில்லை?  ஆரம்ப காலத்திலிருந்தே  அந்தத் தொழில் இழிவானத் தொழில்  என்பதாக நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். செய்து கொண்டிருந்தவர்களும் "நமது விதி" என்று செய்து கொண்டிருந்தனர்.  சீனர்கள் பார்த்தார்கள். பணம் சம்பாதிக்க ஓர் அருமையான தொழில் என்று உள்ளே புகுந்தார்கள். ஆண்கள் மட்டும் அல்ல சீனப் பெண்களும் உள்ளே புகுந்தார்கள்! அவர்கள் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்! அதன் பின்னர் தான் நாம் விழித்தெழுந்தோம்.  யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற ஒரு மனப்பக்குவம் நமக்கு ஏற்பட்டது. இப்போது அந்தத் தொழிலில் உள்ளவர்கள் யாரும் பரம்பரையாக செய்பவர்கள் இல்லை. 

ஆனால் நாம் செய்த ஒரே தவறு தமிழ் நாட்டில் இருந்து வந்து வேலை செய்பவர்களை நாம் மதிக்கவில்லை. அவர்களைப் பல வழிகளில் நாம் ஏமாற்றினோம்.  குறைவான சம்பளம். அதிக நேரம் வேலை.  அவர்களுடைய கடப்பிதழ்களை பிடுங்கி வைத்துக் கொள்வது. அது பற்றி கேட்க ஆளில்லை. கேள்விகள் கேட்டால் ஆள் வைத்து மிரட்டுவது, அடிப்பது, உதைப்பது! 

அவர்கள் அந்நியத் தொழிலாளர்கள் தான். ஆனால் அவர்கள் அடிமைகள் அல்ல. இன்று  நமது பாரம்பரிய தொழில்கள் நசிந்து வருகின்றன என்றால் அதற்குக் காரணமானவர்கள் அந்த முதலாளிகள் தான் என்று தாராளமாகச் சொல்லலாம். 

இந்த நேரத்தில் ஒன்றை ஞாபகப் படுத்துகிறேன். வர்த்தகச் சங்கத் தலைவரும் அவரது மனைவியும் சமீபத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.  அவர்களுடைய பணிப்பெண்களை அவர்கள் கொடுமைப் படுத்தியதாக! மிகப் பெரிய கோடிசுவரன் அவர். அவர்களுடைய பணிப்பெண்களுக்கே இந்த நிலைமை என்றால் பாரம்பரியத் தொழில் செய்யும் இந்த முதலாளிமார்கள் எப்படி இருப்பார்கள்?  பாரிசான் அரசாங்கம் இருந்த போது நீங்கள் வைத்தது சட்டம்.  இப்போது பாக்காத்தான் அரசாங்கத்தைக் குற்ற சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு வீட்டீர்கள்!

இன்று இப்படி ஒரு நிலை வந்ததற்குக் காரணம் நீங்களே தான்! யாரும் உங்களை அழிக்கவில்லை! நீங்களே உங்களை அழித்துக் கொண்டீர்கள்!

No comments:

Post a Comment