Wednesday 15 May 2019

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்...!

கோயில்  இல்லா ஊரில் குடியிருக்க  வேண்டாம் என்பது ஓளவையின் மொழி.  

அதனாலோ என்னவோ கோயிலையும் தமிழர்களையும் பிரிக்க முடிவதில்லை.  ஓளவை என்ன கருத்தில் சொல்லியிருந்தாலும் நமது கருத்து ஒன்று தான். நாம் குடியிருக்கும் இடத்தில் நமக்கு ஒரு கோயில் வேண்டும்.  அவ்வளவு தான்.  கோயிலையும் தமிழர்களையும் பிரிப்பதற்கு எந்த ஒரு சக்தியாலும் முடியாது.

இப்போது நம் நாட்டில் போதுமான கோயில்கள் உள்ளன. நமது தேவை எல்லாம் அந்தக் கோயில்களை நமது சமூக முன்னேற்றத்திற்காக அவைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான்.  

ஏதோ பூஜை புனஸ்காரங்கள் செய்தோம் அத்தோடு முடிந்தது நமது கடமை.  மண்டபத்தை வாடகைக்கு விட்டோம். ஏதோ வாடகை கிடைக்கிறது. அது போதும் என்கிற மன நிம்மதி நமக்கு ஏற்பட்டு விட்டது. 

கோயில்கள் என்றாலே சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற ஓரு பொது இடம் என்னும் நிலைக்கு நாம் வர வேண்டும்.  பள்ளிவாசல்கள் வெள்ளிக்கிழமைகளில் மலாய் மக்களிடையே கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தியது.  அந்த விழிப்புணர்வு தான் இன்று மலாய் மாணவர்களின் கல்வி முன்னேற்றம். 

நமது பெற்றோர்களிடையே இன்னும் அந்த விழிப்புணர்வு  வரவில்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.  அதனால் தான் அரசாங்கம் எவ்வளவோ வாய்ப்புக்கள் கொடைத்தும் நாம் அதனைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறுகிறோம்.  இன்னும் நமது சிந்தனை  பழைய பாணியிலேயே இருக்கிறது. அம்மாவுக்கு உடம்பு சரீல்லை; அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. எங்களைக் கவனித்துக் கொள்ள ஆளில்லை. இங்கேயே இருந்து,  இங்கேயே ஏதோ ஒரு வேலை செய்தால் குடும்பத்தைக் கவனித்த மாதிரியும் இருக்கும், எங்களையும்  கவனித்துக் கொண்ட   மாதிரியும்  இருக்கும்!

இது போன்ற சாக்குப் போக்குகள் நமக்கு மட்டுமே சொந்தம்!  மற்ற இன பெற்றோர்களுக்கு  இப்படியெல்லாம் சிந்திப்பதில்லை. 

இவர்களுக்கெல்லாம் விழிப்புணர்வு கிடைக்க வேண்டிய இடம் கோயில்கள் மட்டும் தான். கல்வியின் முக்கியத்துவம் உணர்த்தப்பட வேண்டும்.  இப்போது தமிழை அறியாதார் பெருகி வருகின்றனர். அதனால் தமிழ் வகுப்புக்கள் எடுக்கப்பட வேண்டும்.  ஓய்வு பெற்ற தமிழாசிரியர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.  இன்று வெளி நாடுகளில் கோயில்கள் தான் தமிழ் மொழி கற்றுக்கொள்ளும் இடங்களாக மாறி வருகின்றன. 

கோயில்கள் பக்தியை வளர்ப்பதோடு நமது மொழி, கலாச்சாரம் அனைத்திலும்  கவனம் செலுத்த வேண்டும்.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்! குடியும் வேண்டாம்!

No comments:

Post a Comment