காலை நேரத்தில் இது போன்ற செய்திகளைப் படிக்கின்ற போது பொதுவாக நமக்கு எரிச்சல் தான் வரும்.
இப்போதைய நிலையில் நமது பொதுவான கருத்து என்ன வென்றால் பாரிசான் அரசாங்கம் என்ன செய்ததோ அதையே தான் பக்காத்தான் அரசாங்கமும் நமக்குத் தொடர்ந்து செய்து வருகிறது!
ஆனால் இது அரசாங்கத்தின் நிலையா? அல்லது கல்வி அமைச்சர் தமிழ்க் கல்வியின் மேல் விரோதப் போக்கைக் கையாள்கிறாரா என்கிற ஐயம் எழத்தான் செய்யும்.
சீனக் கல்விக்கு இருவகையில் பாதுகாப்புக் கிடைக்கிறது. கல்வி அமைச்சர் மஸ்லி மாலேக்கின் தாயார் ஒரு சீனர். அதே சமயத்தில் கல்வித் துணை அமைச்சர் அவரும் ஒரு சீனர். அதுவே சீனக் கல்விக்கு சரியான பாதுகாப்பைக் கொடுக்கிறது. தமிழ் என்று வரும் போது கேட்க ஆளில்லாத ஒரு நிலை. அதனால் தான் துணைக் கல்வி அமைச்சாராக ஒரு தமிழருக்கும் இடம் வேண்டும் என்று சொல்லிக் கொண்டு வருகிறோம்.
என்ன தான் நடந்தது? உப்சி பலகலைக்கழகத்தில் முதுகலை பட்டத்திற்கும், முனைவர் பட்டத்திற்கான ஆய்வுகளும் இனி தமிழில் செய்ய முடியாது என்று உப்சி தடை விதித்திருக்கிறது. இது நிச்சயம் நமக்கு ஏமாற்றம் அளிக்கிறது. என்ன தான் பல்கலைக்கழகம் இந்த முடிவினை எடுத்திருந்தாலும் இது கல்வி அமைச்சரின் அனுமதியின்றி எடுத்த முடிவா என்பது நமக்குப் புரியவில்லை.
பொதுவாகவே இதன் பின்னணியில் அரசியல் இருப்பதாகவே நமக்குத் தோன்றுகிறது. நமக்குப் பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ எல்லா இடங்களிலும் அரசியல் நுழைந்திருக்கிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது.
மெட்ரிகுலேஷன் கல்வி பிரச்சனை எழுந்த போது நாம் என்ன சொன்னோம்! பாரிசான்அரசாங்கத்தில் இந்திய மாணவர்களுக்கு 2200 இடங்கள் கிடைத்தன என்று நாம் அனைவரும் பாரிசான் அரசாங்கத்தை உயர்த்திப் பிடித்தோம்!
அதுவே இப்போதும் நடக்கிறது. அது தான் ஆச்சரியம். பாரிசான் அரசாங்கத்தில் - உப்சி பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை - நமக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை. முதுகலை பட்டம் பெற எந்தத் தடையுமில்லை. தமிழில் ஆய்வுகள் செய்து முனைவர் பட்டம் பெற எந்தத் தடையுமில்லை.
இப்போது ஏன் தடை? பாரிசான் அரசாங்கம் சரியான பாதையில் தானே போய்க் கொண்டிருந்தது? அதனை ஏன் பக்கத்தான் அரசாங்கம் மாற்ற வேண்டும்?
ஆக, இப்போது நாம் மீண்டும் பாரிசான் அரசாங்கத்தின் அருமை பெருமைகளைத் தான் இந்த எருமைகளுக்குச் சொல்ல வேண்டியுள்ளது! என்னதொரு அரசாங்கத்தை நாம் தேர்ந்து எடுத்தோம்! குடியுரிமை என்றால் அவர்களாலும் முடியாது இவர்களாலும் முடியாது! மெட் ரிகுலேஷன் என்றால் அவர்களால் முடியும் இவர்களால் முடியாது! உப்சி என்றால் அவர்களால் முடியும் இவர்களால் முடியாது!
உப்சி பல்கலைக்கழகத்தின் முடிவின் பின்னால் பாரிசான் கட்சியின் பின்னணி இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இந்தியர்களுக்கு அவ்வப்போது பாரிசானின் எச்சரிக்கை மணி ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது!
பக்காத்தான், தமிழர்களின் விரோதப் போக்கைத் தொடருமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
No comments:
Post a Comment