எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை! இவ்வளவு தான் நாம் சொல்ல முடியும்.
பெருநாள் காலம் அல்லவா. ஒவ்வொரு பெருநாள் காலங்களிலும் இன்று எத்தனை சாலை விபத்துகள் என்று தான் நாம் கணக்கிடுகிறோம்! எல்லா பெருநாள் காலங்களிலும் - தீபாவளியோ, சீனப் புத்தாண்டோ, ஹரி ராயாவோ - எதுவாக இருந்தாலும் - சாலை விபத்துக்களுக்குக் குறைச்சல் இல்லை. ஒன்றா இரண்டா சாலை விபத்துகள்? சாலை மரணங்கள்?
நாம் சொல்ல வருவதெல்லாம் சாலை விபத்துகளைக் குறையுங்கள். நம் அனைவருக்குமே அதில் பங்குண்டு என்பதை மறவாதீர்கள். சாலை விதி முறைகளைப் பின் பற்றுங்கள்.
அலட்சியமாகக் கார்களை ஓட்டாதீர்கள். அப்பா வீட்டுக்குப் போகிறோம், அம்மா வீட்டுக்குப் போகிறோம் - எல்லாமே மகிழ்ச்சி தான். அந்த மகிழ்ச்சி வீடு போய் சேரும் வரை இருக்க வேண்டும். மகிழ்ச்சியோடு வீடு திரும்பும் வரை இருக்க வேண்டும். கொஞ்சம் அலட்சியம் காட்டினால் அனைத்தும் தவிடு பொடியாகி விடும்!
சாலைகளில் ஒரு சிறிய அலட்சியம் காட்டினால் கூட அடுத்த நிமிடமே நாம் நாமாக இருக்க மாட்டோம். கார்களில் பாதுகாப்பாக பயணம் செய்வோம். கொஞ்ச நேரம் பிடித்தாலும் பரவாயில்லை. பொறுமையாகப் பயணம் செய்வோம்.
பெருநாள் காலங்களில் நாம் அனைவருமே பெற்றோர்களின் வீடுகளுக்குப் போய் வருவது என்பது மிகவும் பிடித்தமான ஒரு விஷயம். பெற்றோர்களைப் பிரிந்து எங்கெங்கோ வேலை செய்து கொண்டிருக்கிறோம். இது போன்ற பெருநாள் காலங்களில் தான் பெற்றோர்களைப் போய் பார்த்து விட்டு வர முடியும். நமது பயணங்கள் மகிழ்ச்சியாக அமைய வேண்டும்.
தனி ஆளாக இருந்தால் பொது போக்குவரத்துகளைப் பயன் படுத்துவது புத்திசாலித் தனம். அங்கும் நெருக்கடி தான். என்ன செய்வது? கார்களில் பயணம் செய்யும் போதும் நெருக்கடி தான். ஓர் ஐந்து நிமிடப் பயணத்தை இரண்டு மணி நேர பயணமாக பெருநாள் காலங்கள் மாற்றி விடும்! இதெல்லாம் நமக்குத் தெரியாமலா இருக்கிறோம்?
அதனால் தான் இளைஞர்கள் பலர் மோட்டார் சைக்கள்களைப் பயன் படுத்துகின்றனர். தவறு இல்லை. ஆனால் சாலைகளில் அலட்சியம் காட்ட வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள். காரணம் சாலை விபத்துக்களில் பெரும்பாலும் அடிபடுபவர்கள் மோட்டார் சைக்கள் ஓட்டிகளே. அதிகமாக மரணத்தை தழுபவர்களும் அவர்களே.
கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். சாலைகளைச் சாலைகளாகப் பயன்படுத்துங்கள். சர்க்கஸ் வேலைகளை அங்குக் காட்ட வேண்டாம். மகிழ்ச்சியாக பெருநாளைக் கொண்டாடுங்கள்.
எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை!
No comments:
Post a Comment