பள்ளிகளில் ஆங்கிலம் கற்பித்தல் என்பது இன்று பரிதாபத்திற்குரிய ஒரு நிலையை எட்டிவிட்டது!
இதற்கு யார் காரணம்? முழுக்க முழுக்க கல்வி அமைச்சே தான் காரணம். இதில் கருத்து வேறுபாடுகள் தேவை இல்லை. இப்போது பேராசிரியர் ஒருவர் கூறிய கருத்தைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். ஆங்கிலம் போதிக்கும் ஐம்பது விழுக்காடு ஆசிரியர்களுக்குப் போதுமான ஆங்கில அறிவு இல்லை என்கிறார்! இதனை நான் ஏற்றுக் கொள்ளுகிறேன்.
ஆங்கில ஆசிரியர்கள் மேல் இப்படி ஒரு வீண் குற்றச்சாட்டா என்று சிலர் யோசிக்கலாம். இது வீண் குற்றச்சாட்டல்ல!
ஓரு காலக் கட்டத்தில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் சீன, இந்திய மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். மலாய் மாணவர்களே ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளை ஆக்கிரமித்துக் கொண்ட நேரம் அது. பொதுவாகவே மலாய் மாணவர்கள் ஆங்கிலத்தை வரவேற்பதில்லை என்று கல்வி அமைச்சுக்குத் தெரியும். ஆனாலும் அவர்கள் பள்ளிகளில் ஆங்கில மொழி படித்துக் கொடுக்க வேண்டும் என்கிற ஒரு கட்டாய நிலையை ஏற்படுத்தியது கல்வி அமைச்சு! ஆனால் இது தொடர்கதை ஆனது தான் இப்போதைய ஆங்கிலத்தின் கடும் வீழ்ச்சி!
பொதுவாக ஆங்கிலம் ஓர் அந்நியம் என்றே மலாய் மாணவர்கள் நினைக்கின்றார்கள். அது எங்கிருந்தோ ஊட்டப்பட்டு விட்டது. ஆனால் சீன, இந்தியர்களுக்கு இந்தப் பிரச்சனை இல்லை. அவர்களில் பலர் வீட்டில் ஆங்கிலம் பேசுகின்ற பழக்கம் உண்டு. பலருக்கு ஆங்கிலத்தில் நல்ல புலமை உண்டு.
ஆங்கிலம் கற்றுக் கொடுக்க இந்திய, சீன ஆசிரியர்களைக் கல்வி அமைச்சு ஊக்குவித்திருக்க வேண்டும். ஆனால் கல்வி அமைச்சில் பணி புரிபவர்களுக்குக் கொஞ்சம் தலைக்கனம் அதிகம்! "உங்களால் முடிந்தால் எங்களால் முடியாதோ?" என்று சொல்லிக் கொண்டே மலாய் ஆசிரியர்களையே மீண்டும் மீண்டும் ஆங்கில ஆசிரியர்களாக நியமன செய்தது! மலாய் ஆசிரியர்கள் திறமையற்றவர்கள் என்று நாம் சொல்ல வரவில்லை. தங்களுக்குப் பிடிக்காத ஒரு மொழியான ஆங்கிலத்தைப் படித்துக் கொடுக்கச் சொன்னால் அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுக்குப் பிடிக்காத ஒரு மொழியைப் பிடிக்காதவாறு தான் அவர்கள் படித்துக் கொடுப்பார்கள்! அப்புறம் எங்கே தரம் வரும்? தரமற்ற ஒரு கல்வியாக ஆங்கிலம் இன்று நமது பள்ளிகளில் போதிக்கப்படுகின்றது என்றால் அதற்குக் காரணமே கல்வி அமைச்சு தான்!
இன்றைய நிலையில் யார் குற்றவாளி என்று கை நீட்ட வேண்டுமானால் நாம் கை நீட்ட வேண்டியது கல்வி அமைச்சை மட்டும் தான். அங்குள்ள குட்டி நெப்போலியன்களால் ஏற்படுத்தப்பட்ட சாதனை இது!
No comments:
Post a Comment