நாட்டில் உள்ள நமது சமயங்களை இழிவபடுத்துவது, பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை வெளியே விட்டு வைக்கக் கூடாது என்பதில் அரசாங்கம் இன்னும் தீவிரமாக இல்லை என்பதை சமீபத்திய நடவடிக்கைகள் காட்டுகின்றன.
ஸாகிர் நாயக்கின் சீடன் என்று சொல்லிக் கொண்டு இஸ்லாம் அல்லாத மற்ற மதங்களை இழிவுபடுத்தும் ஸம்ரி வினோத் காளிமுத்து என்னும் நபரைப் பற்றி காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் நாம் எங்கோ ஏதோ தவறு செய்கிறோம் என்று தான் அர்த்தம்.
தவறுகளுக்குத் தண்டனைக் கொடுக்கப்பட வேண்டும். எந்த மதம் ஆனாலும் கேலி, கிண்டல் பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஆனால் நாம் இங்கு பெரிய தவறு செய்கிறோம். இந்த நபர் வெட்ட வெளியில் பேசுகின்ற பேச்சுக்கள் நாடெங்கிலும் பரவலாகப் பேசப் படுகின்றன. ஊடகங்களில் வெளியாகின்றன. எந்த ஒளிவு மறைவும் இல்லை. மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. கோபத்தை ஏற்படுத்துகின்றன. காவல்துறைக்கு மட்டும் எந்த வித தாக்கத்தையும்
ஏற்படுத்தவில்லை!
காவல்துறை நீதியை நிலை நாட்ட வேண்டும். தாங்கள் ஏதோ ஒரு மதத்தினருக்கு மட்டுமே சொந்தம் என்னும் கொள்கையைக் கை விட வேண்டும். காவல்துறை அனைத்து மதத்தினருக்கும் சொந்தமானது. எந்த மதத்தினரைப் பற்றியும் அமைதியின்மையைத் தூண்டும் வகையில் பேசுவதோ எழுதுவதோ யாருக்கும் உரிமை இல்லை. அதைக் கண்காணிப்பது காவால்துறையின் வேலை. இங்கு உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்னும் பேதம் இல்லை. அதே போல கடவுள் நம்பிக்கையில் உயர்ந்தது, தாழ்ந்தது என்று ஒன்றும் இல்லை.
இப்போது நாம் காவல்துறையைத் தான் குற்றம் சாட்ட வேண்டிய சூழலில் இருக்கிறோம். இந்து மதத்தை இழிவுபடுத்திப் பேசிய ஸம்ரி காளிமுத்துவின் மேல் 800 க்கும் மேற்பட்ட போலிஸ் புகார்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை!
அப்படி என்றால் எந்த மதத்தையும் தாக்கிப் பேசலாம். காவல்துறை கண்டு கொள்ளாது என்றே நாம் நினைக்க வேண்டியுள்ளது. இதற்கு அரசாங்கம் ஒரு முடிவைக் காண வேண்டும். மதங்களை வைத்துக் கொண்டு மதம் பிடித்து ஆடுபவர்களைத் தண்டிக்க வேண்டும். கடும் தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும்.
இதற்கான தீர்வைக் காண வேண்டும். தாமதம் வேண்டாம்!
No comments:
Post a Comment