சமீபத்தில் நமது பிரதமர் டாக்டர் மகாதிர் ஒரு கருத்தைச் சொல்லியிருந்தார்.
அரசாங்க ஊழியர்கள் இலஞ்சம் வாங்குவதைத் தவறாக நினைக்கவில்லை. ஆனால் குடிப்பது - தண்ணி அடிப்பது -தான் தவறு என்பதாக நினைக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.
நாம் என்ன நினைக்கிறோம்? ஆமாம் பணம் ஓசியில் வந்தால் அது தவறு இல்லை. ஆனால் குடி அப்படியா? ஐயோ! அப்பா! அது எவ்வளவு பெரிய பாதகம்! அடாடா! குடிப்பது என்பது எம்மாம் பெரிய தவறு! நோ! நோ! நோ! அள்ளிக் கொடுத்தாலும் நான் குடிக்கப்பட்டேன்!
இப்படித்தான் நமது மனநிலை! அதாவது இலஞ்சம் வாங்குவது புண்ணியம்! குடிப்பது நரகம்!
ஆமாம், இதில் எது சரி? இரண்டுமே சரியில்லை. அது தான் சரி. குடிப்பது குடும்பத்திற்குக் கேடு. எத்தனையோ குடும்பங்கள் குடியினால் சின்னாப்பின்னமாகி போய்வி்ட்டன. குடும்பத் தலைவன் குடிகாரனாக இருந்தால் அந்தக் குடும்பம் தலை தூக்குவது .....தலை தூக்குவதா! தலையே தூக்க முடியாது! குடியினால் சீரழிந்த குடும்பங்கள் ஏராளம்! ஏராளம்! அதுவும் இந்தியர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
சரி, குடியினால் குடும்பம் சீரழிகிறது, பார்த்தோம். இலஞ்சம் வாங்குவதினால் என்ன தவறு? எந்த ஒரு மதமும் குடியை வரவேற்கவில்லை. ஏன்? இலஞ்சத்தை மட்டும் வரவேற்கின்றதோ? இல்லை! அதுவும் இல்லை! இலஞ்சத்தைக் கண்டிக்கின்றன.
இலஞ்சத்தினால் என்ன தீமை? தகுதியற்ற வேலைகள் செய்து கொடுக்கப்படுகின்றன. காலந்தாழ்த்தப் படுகின்றன. அரசாங்க கோப்புகள் நகர மறுக்கின்றன. தலைமை சரியாக இல்லை என்றால் கடைநிலை ஊழியினும் காசை எதிர்ப்பார்க்கின்றான்!
மிகவும் அதிர்ச்சியான செய்தி. கடந்த கால அரசாங்கம் பதவியில் இருந்திருந்தால் இந்நேரம் மலேசியாவின் ஒரு சில பகுதிகள் சீனாவுக்குள் அடைக்கலமாகி இருக்கும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. மலேசியாவுக்குள் இன்னொரு நாட்டின் ஆதிக்கம்! அது தான் இலஞ்சத்தின் உச்சக் கட்டம்!
இலஞ்சம் மனிதனை, தன் நாட்டையே காட்டிக் கொடுக்க வைக்கும்! பதவியில் உள்ளவன் பணத்துக்காக நாட்டையே விற்கத் துணிவான்!
குடி என்பதோ ஒரு குடும்பத்தை அழிக்கும் தனமை உடையது. இலஞ்சம் என்பதோ ஒரு நாட்டையே அழிக்கும் தனமை உடையது. நமக்குக் குடியும் வேண்டாம். இலஞ்சமும் வேண்டாம். இரண்டுமே ஒழிக்கப்பட வேண்டியவை.
மறை நூல்கள் என்ன சொல்லுகின்றனவோ அது தான் நமது கடமையுங் கூட!
No comments:
Post a Comment