Sunday 12 May 2019

இது சமுதாயத்தின் வெற்றியா....?

இந்த ஆண்டு மெட்ரிகுலேஷன்  கல்வி பயில மொத்தம் 2,228 இடங்கள் இந்திய மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக  ஆகக் கடைசி செய்திகள் கூறுகின்றன.

"இது சமுதாயத்தின் வெற்றி" என்பதாக  தமிழ் மலர் நாளிதழ் அதனை வர்ணிக்கிறது. இல்லை. நான் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த இடங்கள் நமக்குச் சும்மா கிடைக்கவில்லை. நமது போராட்டம்,  மகஜர்கள், பொங்கியெழுந்த மக்கள், ஊடகங்கள்  - அனைவரும் எழுப்பிய பக்காத்தான் அரசாங்கத்திற்கு எதிரான கூக்குரல் - இது தான் இந்த வெற்றியை ஏற்படுத்தியிருக்கிறது!

இது சமுதாயத்தின் வெற்றி என்பதை நான் வேறு கோணத்தில் பார்க்கிறேன். பக்காத்தான் அரசாங்கம் நாம் கேட்காமலேயே நமது மாணவர்களுக்குத் தேவையான இடங்களை ஒதுக்கி இருக்க வேண்டும். அது அவர்களின் கடமை என்பதை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். கடந்த அரசாங்கம்  எத்தனை இடங்கள் நமக்கு ஒதுக்கி இருந்தனவோ அந்த அளவேனும் நாம் கேட்காமலேயே அவர்கள் கொடுத்திருக்க வேண்டும்.  அப்படி அவர்கள் கொடுத்திருந்தால் - நாம் கேட்காமலேயே அவர்கள் அததனை இடங்களை அவர்கள் கொடுத்திருந்தால் - அது தான் இந்த சமுதாயத்தின் வெற்றி.  நாம் தேர்ந்தெடுத்த அரசாங்கம் நமக்குச் செய்த கைம்மாறு. அரசாங்கம் இந்த சமுதாயத்தின் மேல் வைத்த நம்பிக்கை. அது தான் இந்தச் சமுதாயத்தின் வெற்றி. 

ஆனால் நடந்தது என்ன?  எல்லாம் நேர்மாறாக நடந்தது! முந்தைய  அரசாங்கத்தின் கொள்கைகளை அப்படியே கடைப்பிடித்தது பக்காத்தான் அரசாங்கம்! இது தான் நமக்குக் கிடைத்த முதல் அடி! இப்போது இந்த அரசாங்கத்தை எந்த அளவுக்கு நம்புவது என்பது தான் நம்முடைய கேள்வி. இனி மேலும் நம்ப முடியுமா? தெரியவில்லை! 

அடுத்த ஆண்டும் இந்தப் பிரச்சனை நீளுமா என்பதும் இன்னும் தெளிவில்லை!  கல்வி அமைச்சர் எந்த உறுதிமொழியும் கொடுக்கவில்லை. அடுத்த ஆண்டும் அமைச்சர் குலசேகரன் அமைச்சரவையில் பேசித்தான் நமது மாணவர்களுக்கு இடங்களை வாங்கிக் கொடுப்பாரா? தெரியவில்லை!  சரி, குலசேகரன் இல்லையென்றால் வேறு அமைச்சர்கள் வாயைத் திறப்பார்களா? தெரியவில்லை!  இப்போது நமது மற்றைய அமைச்சர்கள் மீது நமக்கு மரியாதையும்  நம்பிக்கையும் குறைந்து வருகிறது. 

நமக்கு மீண்டும் ம.இ.கா.பாணி அமைச்சர்கள் தேவை இல்லை.  இப்போது நம்மிடையே உள்ள அமைச்சர்கள் மக்கள் பணத்தில் கை வைத்தவர்கள் என்று யாரும் சொல்ல முடியாது.  அதனை அவர்கள் தொடர்ந்து காப்பாற்ற வேண்டும். அது மட்டும் அல்ல. அவர்கள் செயல்பட  வேண்டும்.  அவர்கள் தங்களின் அமைச்சின் கடமைகளைச்  செய்கிறார்கள் என்பது நமக்கும் தெரியும்.  அதே சமயத்தில் இந்திய சமுதாயத்தின் பிரச்சனைகளை கூடிப் பேசி தீர்க்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.

இது தற்காலிக வெற்றி தான்! 
                                                                                                                                                                                                                                                                                                                                                                      

No comments:

Post a Comment