Friday 17 May 2019

சமயங்கள் தீவிரவாதத்தைப் போதிக்க வில்லை..!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு கருத்தைச் சொன்னார். "ஓர் இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது. ஓர் தீவிரவாதி இந்துவாக இருக்க முடியாது."

மிகச் சரியான கருத்து என்பதில்  எந்த ஐயமுமில்லை.  

மோடி சொன்ன இந்தக் கருத்து எல்லா மதங்களுக்கும் பொருந்தும். மதங்கள்,  ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு சாகுங்கள் என்று  சொல்லவில்லை.

ஆனால் எல்லா மதத்தினருள்ளும் ஒரு சிலர் இப்படி  அடித்துக் கொண்டு சாவதையும், சுட்டுக் கொண்டு சாவதையும்,  குண்டுகள் வீசி அழிப்பவரும்  இருக்கத்தான் செய்கின்றனர்.  அவர்கள் பயங்கரவாதிகளே தவிர எந்த மதத்தையும் சார்ந்தவரில்லை என்பது தான் உண்மை.

ஜாகிர் நாயக் பயங்கரவாதத்தைத் தூண்டுகிறார் என்பது தான் அவர் மீதுள்ள குற்றச்சாட்டு. இஸ்லாம் தூண்டுகிறது என்று யாரும் சொல்லவில்லை. 

பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நடைபெறுகின்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள்  பயங்கரவாதமே தவிர அதற்கும் இஸ்லாம் மதத்திற்கும் சம்பந்தமில்லை. பயங்கரவாதிகள் இஸ்லாமியர்கள் அவ்வளவு தான்.

இந்தியாவில், குறிப்பாக வட இந்தியாவில்,  இஸ்லாமியர்கள் இந்துக்களால் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் அதிகம்.  அவர்கள் இந்துக்கள் என்பதைத் தவிர இந்து மதம் அதனைச் செய்ய சொல்லவில்லை.  அவர்கள் இந்து பயங்கரவாதிகள், அவ்வளவு தான்.

சமீபத்தில் நியுசிலாந்து பள்ளிவாசலில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம். தாக்குதலை நடத்தியவன்  ஒரு கிறிஸ்துவன் என்பதைத் தவிர கிறிஸ்துவ மதம் அதனைப் போதிக்கவில்லை. இலங்கையில் நடந்த கிறிஸ்துவ தேவாலயங்களின் மீதான தாக்குதல் - இஸ்லாம் அதனைப் போதிக்கவில்லை.   தாக்குதல் நடத்தியவர்கள் பயங்கரவாதிகள்.  அவ்வளவு தான். 

இலங்கையில் தமிழர் மீதான தாக்குதல்களை  நடத்துபவர்கள் புத்த மதத்தினர் என்கிறோம்.  புத்த மதம் என்ன மற்ற இனத்தவரை வெறுத்து ஒதுக்கவா சொல்லுகிறது?  அது பயங்கரவாதம்.  மியான்மாரிலும் ரோஹிங்யா மக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் யார்?  அவர்கள் ம்தத்தால் புத்த மதத்தினரே தவிர புத்தம் அதனைப் போதிக்கவில்லையே!

பிரதமர் மோடி சொன்ன கருத்து சரிதான். ஓர் இந்து தீவிரவாதி ஆக முடியாது. ஒரு கிறிஸ்துவன் தீவிரவாதி ஆக முடியாது. ஓர் இஸ்லாமியன்  தீவிரவாதி ஆக முடியாது. ஓர் புத்தன் தீவிரவாதி ஆக முடியாது.

ஆனால் மதங்களைப் பின் பற்றுபவர்கள்  தீவிரவாதிகள்  ஆகலாம்.   அவன் சாகும் போது  அவனின் கடவுளின் பெயரை உச்சரிக்கலாம்.   அது அவன் சாகும்போது ஏற்படுகின்ற பயமாகக்  கூட இருக்கக் கூடும்!

எந்த ஒரு சமயமும்  தீவிரவாதத்தைப் போதிக்கவில்லை. அப்ப்டி போதிக்கக் கூடிய மதம் என்று ஒன்றுமில்லை. மதத்தின் பெயரால் தாக்குதல்கள் நடக்கின்றன!  அதனால் மதத்திற்கு அவப்பெயரைத் தவிரவேறு என்ன?
 

No comments:

Post a Comment