Monday 6 May 2019

இலஞ்சமோ இலஞ்சம்..!

 இன்று  நடப்பு அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் யார்?

கடந்த காலங்களில் பாரிசான் ஆட்சி என்றாலே நமக்குத் தெரியும். இலஞ்சம் வாங்காத அரசாங்க அதிகாரிகள் இல்லை என்கிற அளவுக்கு அது நீக்கமற நிறைந்திருந்தது!

இப்போது புதிய அரசாங்கம் பதவியேற்றதும் நிலை தலை கீழாக மாறியிருக்கிறது! இலஞ்சம் வாங்க ஆசை தான். எந்த நேரத்தில் யார் அகப்படுவார் அல்லது யார் காட்டிக் கொடுப்பார் என்று கணிக்க முடியவில்லை! பயம் வேறு! ஆமாம்! இலஞ்சம் வாங்கப் போய் இருக்கிற வேலையும் பறி போனால் "பூவா" விற்கு எங்கே போய் பிச்சை எடுப்பது?

இப்போது தான் இவர்களுக்குப் பயம் வந்திருக்கிறது!  அது பரவாயில்லை.   அந்த பயம் ஆத்திரமாக மாறிவிட்டது! ஆமாம்,  இந்தப் புதிய அரசாங்கத்தால் தங்களது  'வரவு' பாதிக்கப்பட்டு விட்டதே என்கிற கோபம்  அவர்கள் அரசாங்கத்தை வீழ்த்த எதிர்கட்சியினரோடு கைக் கோர்த்து  வருகின்றனர்!

இலஞ்சம் என்று வரும் போது நமது பாரம்பரியம் மறந்து போகிறது. நமது சமயம் என்ன சொல்லுகிறது என்பதும் மறந்து போகிறது.  நமது பெரியவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதும் மறந்து போகிறது. லஞ்சம் யாரைப் பாதிக்கிறது என்பது மறந்து போகிறது. ஏழை எளியவர்களைப் பாதிக்கிறது என்பதும் மறந்து போகிறது.

இப்படி அரசாங்கத்தில் உள்ளவன் ஒவ்வொருவனும் இலஞ்சம் வாங்கினால் அது நாட்டையே பாதிக்கிறது என்பதையே அறியாதவர்களா அவர்கள்?  முதலில் இலஞ்சம் மக்களிடமிருந்து வாங்குவது.  மக்கள் பாதிக்கப் படுகிறார்கள்.  குத்தகையாளர்களைப்  பிழிந்தெடுப்பது.  குத்தைகையாளன் பணம் பார்க்க முடிவதில்லை!  உலக அளவில் செய்யப்படும் வியாபார ஒப்பந்தங்கள்.  கோடிக்கணக்கில் பணம் இலஞ்சமாகப் புரளுகிறது!  அப்புறம் நாடு எப்படி உருப்படும்?      

விலைவாசி ஏற்றத்தால் மக்கள் சிரமப்படுகிறார்கள். ஓர் இளந்தாய் தனது குழந்தைக்குப் பால் மாவு வாங்க முடியாமல் தேநீரையும், சோற்றையும் ஊட்டவதை நான் அறிவேன்.   இது போன்ற பாதகச் செயல்களுக்கு யார் காரணம்? இலஞ்சம் வாங்கும் இழிப்பிறவிகள் தானே!

நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்பவர்கள் யார்? ஆட்சியாளர்கள் என்றும், இஸ்லாம் என்றும், மலாய் மொழி என்றும் குரல் எழுப்பவர்கள் யார்?  வேறு யாருமல்ல! இலஞ்சத்தையே தொழிலாகக் கொண்டவர்கள் தான்! தங்களது வருமானம் போய்விட்டதே என்று அங்கலாய்க்கும் இவர்கள் தான் இன்று எதிர்க்கட்சி ஆதரவாளர்களாக வலம் வருகிறார்கள்!

இப்போது இலஞ்சம் குறைந்திருக்கிறது.  அது போதும். அது தொடர வேண்டும் என்பதே நமது  வேண்டுகோள். 

இலஞ்சம் ஒழிக! முற்றிலுமாக ஒழிக!

No comments:

Post a Comment