Wednesday 15 May 2019

தொழிலாளர் பற்றாக்குறை...!

தொழிலாளர் பற்றாக்குறையால் இந்தியர்களின் தொழில்கள் பாதிக்கப்படுகின்றன என்பதை அறியும் போது  நமக்கும் வேதனை தான்.

இந்தியர் சார்ந்த அனைத்துத் தொழில்களும் இன்று தேக்கம் அடைந்து விட்டதாகக் கூறப்படுகின்றது. கோலாலம்பூரில் சமீப காலத்தில் மூன்று இந்திய உண்வகங்கள் மூடப்பட்டு விட்டதாகக் கூறப்படுகின்றது. இன்னும் பல தொழில்களும் ஆள்பற்றாக் குறையால்  மூடப்படும் அபாயத்தில் உள்ளன என்றும் சொல்லப் படுகின்றது.

என்னைச் சுற்றி நான் பார்க்கின்ற போது, நான் வழக்கமாகப் போகும் உணவகங்கள், வேறு பல இந்தியர்  சார்ந்த தொழில்கள், இவைகளைப் பார்க்கும் போது எந்த ஒரு தொழிலும் ஆள் பற்றாக் குறையால் மூடப்பட வில்லை.  நிர்வாகக் கோளாரினால் ஓரிரு உணவகங்கள் மூடப்பட்டிருக்கின்றன என்பது எனக்குத் தெரியும்.   அதனைச் சரி செய்வதற்கு திறமையான நிர்வாகம் தேவை. தொழில் செய்பவர்களுக்குத் தான் செய்யும் தொழிலில் அனுபவம் இல்லாததால் தான் பல தொழில்கள் மூடப்படுகின்றன. 

நான் வாடிக்கையாகப் போகும் உணவகங்கள் எந்தப் பிரச்சனையும் இன்றி இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றன. இந்த உணவகங்களில் அந்நியத் தொழிலாளர்களும் அத்தோடு உள்நாட்டுத் தொழிலாளர்களும் - பெரும்பாலும் பெண்கள் - வேலை செய்து கொண்டு தான் இருக்கின்றனர். அல்லது குடும்ப உறுப்பினர்கள் அதிகம் பங்கெடுக்கின்றனர். மூடுகிறோம் என்கிற பிரச்சனைக்கே இடமில்லை!

ஆள் பற்றாக்குறை தான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் இன்னொரு பக்கம் உணவகங்கள் திறப்பு விழா கண்டு கொண்டு தான் இருக்கின்றன.  ஒருவர் விற்கிறார் ஒருவர் வாங்குகிறார். அதுவும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது!

முடி திருத்தகம் பற்றி பேசும் போது அங்கும் ஆள்பற்றாக் குறை நிலவத்தான் செய்கிறது. இந்த நிலையிலும்  எனக்குத் தெரிந்த ஓர் இளைஞர் புதிது புதிதாக  க்டைகளைத்  திறந்து கொண்டு தான்  போகிறார்!  இவர்கள் எல்லாம் எப்படி பிழைப்பு  நடத்துகிறார்கள்  என்பது  எனக்கும் புரியாத புதிராகத்தான் இருக்கிறது!

ஆனால் ஒன்று சொல்லுவேன். இது அரசாங்கத்திற்கு நான் கொடுக்கும்  வேண்டுகோளாக எடுத்துக் கொள்ளலாம். நாட்டிற்குள்  சுற்றித்திரியும் வெளி நாட்டவர் ஏராளம்.  இவர்களுக்கு முறையான ஆவணங்களைக் கொடுத்து  இவர்களுக்கு வேலை கொடுக்கலாம். இதன் மூலம் ஓரளவு இந்தப் பிரச்சனைகளுக்குத்  தீர்வு  காணலாம்.  குறிப்பிட்ட இனத்தவர் தான் வேண்டும் என்று அடம் பிடிக்காமல் வேற்று நாட்டவர்களையும்  நமது பணிமனைகளில் சேர்த்துக் கொள்ள பழக வேண்டும். எனக்குத் தெரிந்து பல உணவகங்களில், முடி திருத்தகங்களில் வங்காள தேசிகள், நேப்பாளிகள், பர்மியர்கள். இலங்கையர்கள் பணி புரிகிறார்கள்.

இது காலத்திற்கு ஏற்ற மாற்றங்கள். இனி நமது தொழில்கள் இப்படித்தான் நகர வேண்டும். துணிந்து மாற்றங்களை  ஏற்றுக்கொள்ள  பழக வேண்டும்.  வேறு மாற்று வழிகள் இருந்தால் யார் ஆட்சேபிக்கப் போகிறார்!  துணிந்து நடை போடுங்கள்.  ஆனால்  மூடு விழா என்னும் பேச்சே வேண்டாம்!

No comments:

Post a Comment