Sunday 26 January 2020

வாருங்கள் நாமும் முன்னேறுவோம்! (27)


நேர்மை தான் நம்மை வாழ வைக்கும்!

உலகையே நாம் கட்டி ஆண்டாலும் நேர்மை என்று ஒன்று இல்லென்றால் அது நரக வாழ்க்கை தான்!

அதுவும் தொழிலில் உள்ளவர்களுக்கு நேர்மை, நாணயம் மிகவும் முக்கியம்.  நமக்கு நீண்டகால வாடிக்கையாளர்கள் வேண்டுமென்றால் நமக்கு நேர்மை மிக மிக அவசியம்.  நாம் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் போது  அவர்களை நாம் தக்கவைப்பது கடினம்.

நமது வாடிக்கையாளர்களில் பலர் நம்மிடம் தொடர்ந்து நம்மோடு வாடிக்கையாளர்களாகவே இருக்க விரும்புகின்றனர். நாம் அவர்களை ஏமாற்றினால்  அவர்கள் நம்மை விட்டு விலகிவிடுவார்கள். 

நாம் தொழில் செய்யும் இடத்தில் எத்தனையோ வியாபார நிலையங்கள் இருக்கலாம். இது போட்டி நிறைந்த உலகம்.  நாம் ஒரு நடுத்தர பேரங்காடி வைத்திருந்தால் ஏறக்குறைய  நமது வாடிக்கையாளர்களை நாம் அறிந்து வைத்திருக்கலாம்.  அவர்கள் எதனால் நம்மிடம் வருகிறார்கள் என்பதையும் நாம் புரிந்து வைத்திருக்க வேண்டும்.  ஒரு வேளை நமது அருகாமையில் இருக்கலாம்.  விலை குறைவாக இருக்கலாம். நாம் தமிழர் என்பதற்காக நமக்கு ஆதரவு கொடுக்கலாம்.  தமிழர்களின் முன்னேற்றத்திற்கு அவர்களும் ஒரு காரணமாக இருக்கலாம் - இப்படி பல காரணிகள் உண்டு. 

இது போன்ற வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளுவது நமது கடமையாக கொள்ள வேண்டும்.  நாம் ஓர் இனத்தை வைத்து எந்தத் தொழிலையும் செய்வதில்லை. வியாபாரம் என்பது அனைத்து இனத்தையும் சார்ந்தது.  

நம்மைப் பொறுத்தவரை மலாய்க்காரர்கள், இந்தியர்கள் என்கிற வரிசை தான் எப்போதுமே. திறமையுள்ளவர்கள் சீனர்களையும் கொண்டு வந்து விடுகிறார்கள்! சீனர்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டால் அவர்களுடன் எளிதாக வியாபாரம் செய்ய ஆரம்பித்து விடலாம். 

யாராக இருந்தாலும், எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவரும் விரும்புவது ஒன்று தான்.  தாங்கள் ஏமாற்றப்படக் கூடாது என்பதைத் தான் விரும்புகிறார்கள். 

அதற்குத் தேவை நேர்மை ஒன்று மட்டும் தான். நீண்ட நாள் வாடிக்கையாளர்கள் வேண்டும் என்றால், நீண்ட நாள் வியாபாரத்தில் தாக்குப் பிடிக்க வேண்டும் என்றால் நேர்மை, நாணயம் - இவைகள் மட்டும் தான்!

No comments:

Post a Comment