Saturday 25 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (26)


நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

தொழிலாக இருந்தாலும் சரி,  வாழ்க்கையாக இருந்தாலும் சரி நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். அதாவது நேர்மறை எண்ணங்களாகவே மாறி விடுங்கள்!

மிகவும் கஷ்டமான  காரியம் தான்!  நம்மைச் சுற்றி நடப்பவை அனைத்தும் நம்மை எதிர்மறையான எண்ணங்களுக்குத் தான் இட்டுச் செல்கின்றன என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.  நாமும் அவர்களோடு இழுத்துச் செல்லப்படுகிறோம்.

குழந்தை முதல் நமக்கு ஊட்டப்படுவது எல்லாம் எதிர்மறையான எண்ணங்கள் தான். அப்படியே வளர்ந்துவிட்ட பிறகு நேர்மறையான எண்ணங்களை எப்படி வளர்த்துக் கொள்ளுவது?

"மழையில் நினைந்தால் சளி பிடிக்கும்!" என்று சொல்லி சொல்லியே வளர்க்கப்பட்டிருக்கிறோம்! அது எந்த அளவுக்கு உண்மை? எனக்கு அப்படியெல்லாம் சளி பிடித்ததில்லை! என்னை விட மூத்த ஒரு மருத்துவ உதவியாளர் நன்றாக மழையில் நினைந்து போனார். "போச்சு! போச்சு!: என்று ஒரே புலம்பல்! வயதான காலம் வேறு. கடைசியில் இறந்தே போனார்!  எண்ணங்கள் அந்த அளவுக்கு வலிமையாக இருக்கின்றன.

எல்லாமே நமது மனதில் தான் இருக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாக வியாபாரத் துறையில் இருக்கும் ஓர் இளைஞன் தனது வியாபாரத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய ஒரு சூழல். தயங்கவில்லை. மாறிவிட்டான்.  அத்தோடு ஒரு கணக்கையும் போட்டு விட்டான்.  புதிய இடத்தில் வியாபாரம் அமோகமாக இருக்கும் என்றும் வாடிக்கையாளர்கள் இன்னும் அதிகரிப்பார்கள் என்றும் தனக்குத் தானே சொல்லிக் கொண்டதும் அல்லாமல்  அதையே நம்பவும் செய்தான். கடுமையாகவும் உழைத்தான்.அதாவது நேர்மறையான எண்ணங்களை மனதில் பதிவு செய்தான்! எதிர்பார்த்த வெற்றியும்  அவனைத் தேடி வந்தது.

இது தான் நேர்மறை எண்ணங்களுக்கான வலிமை. 

"மனம் போல் வாழ்வு",  "மனம் போல மாங்கல்யம்"  என்பதெல்லாம் சும்மா பொழுது போக்குக்காக சொல்லப்பட்டவை அல்ல. மனதை சரியான வ்ழியில் கொண்டு சென்றால் அனைத்தும் சரியாகவே நடக்கும் என்பது தான் அதன் பொருள். 

கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். சீனர்களின் பொருளாதார முன்னேற்றம் எப்படி அமைகிறது?  நாம் அவர்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் நினைக்கலாம். அவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

"மலேசியாவின் பொருளாதாரம் எங்கள் கையில். அதனை யாரும் எங்களிடமிருந்து பறித்துவிட முடியாது. இன்னும் புதிய புதிய சீன தொழில் முகவர்களை உருவாக்குவோம். இன்னும் புதிய தொழில்களை உருவாக்குவோம். நீங்கள் எங்கே போய் முட்டிக் கொண்டாலும் எங்களை நீங்கள் மிஞ்ச முடியாது!  இப்போதும் நாங்கள் தான் பொருளாதார ரீதியில் வலிமையானவர்கள்.  தேவை என்றால் எங்கள் வலிமையைக் காட்டுவோம்!  அதுவரை எங்கள் பொருளாதாரத்தை உயர்த்திக் கொண்டே போவோம்!"  என்கிற நேர்மறையான எண்ணங்கள் அவர்களை மேலே மேலே கொண்டு செல்கிறது!

சீனர்களின் பொருளாதாரத்தை யாராலும் தட்டிப் பறிக்க முடியுமா?  அது நமக்கு தேவை இல்லாத விஷயம். நம்மைப் பொறுத்தவரை நம்மை நாம் உயர்த்திக் கொள்ள என்ன செய்யலாம் என்பதைத் தான் யோசிக்க வேண்டும். 

நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். நமது எண்ணங்கள் நம்மை உயர்த்தும்.

வளர்வோம்! வளர்வோம்! வளர்வோம்!

No comments:

Post a Comment