Tuesday 7 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (8)

ஏன் கவனம் சிதறுகிறது?

தொழில்களில் ஈடுபடும் ஆரம்பகாலத்தில் நம்மில் பலர் தொழிலைவிட்டு வேறு எங்கேயோ கவனத்தைச் செலுத்தி தொழிலை 'அம்போ' என்று விட்டு விடுகிறோம்!

காலங்காலமாக தொழில் ஈடுபட்டவர்களுக்கு எந்தவித கவனச் சிதறல்களும் ஏற்படுவதில்லை. ஒரே காரணம் தான். செய்யும் தொழிலே தெய்வம் என்பது தான் அவர்களது கொள்கை. 

சான்றாக சீனர்களைப் பாருங்கள். வெளியே பலருக்குத் தெரியும்படியாக அரசியல் பேசுவதில்லை. அவர்கள் கவனம் என்பது அவர்கள் செய்யும் தொழிலில் மட்டும் தான் இருக்கும். மற்றவைகள் அனைத்தும் அவர்களுக்கு தேவை இல்லாதவை. அவர்கள் நன்கு வளர்ந்த பின்னர் தான் பொது வாழ்க்கைக்கு வருகிறார்கள்.அதனால் தான் அரசியலுக்கு வந்த பின்னரும் யோக்கியமாக அவர்களால் இருக்க முடிகிறது!  நமது அரசியல்வாதிகளைக் கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள்!

சீனர்கள் மட்டும் அல்ல.  நமது தமிழ் முஸ்லிம் சகோதரர்களைப் பாருங்கள். அவர்கள் தொழில் தான் அவர்களுக்கு முக்கியம்.  இரண்டாவது மூன்றாவது தலைமுறைகள் தான் அரசியலுக்கோ பொது வாழ்க்கைக்கோ வருகிறார்கள். ஏன்? வீட்டு தளவாட சாமான்கள் விற்கும் குஜாராத்தி = அல்லது பட்டேல் - சகோதரர்களைப் பாருங்கள். அவர்களின் தொழிலுக்குத் தான் முதலிடம். தொழிலை விட்டு அவர்கள் நகருவதில்லை. இப்போது குறிப்பிடப்பட்டவர்கள் எல்லாம் தலைமுறை தலைமுறையாக தொழிலில் 'கொட்டை' போட்டவர்கள்! அவர்கள் தங்களது தொழிலுக்குத் தான் முதலிடம் கொடுக்கிறார்கள்! ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. தொழில் தான் அவர்களின் வாழ்வாதாரம்.  தொழிலை விட்டுவிட்டு யாரிடமும் போய் கை கட்டி அவர்கள் வேலை செய்ய விரும்புவதில்லை.

ஆனால் நமது நிலை என்ன? ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பார்கள்.  தொழிலில் வெற்றியைக் காணும் முன்பே எவனோ ஓர் அரசியவாதி வருவான். அவனுக்குக் கால் கை பிடிக்க வேண்டும். அப்போது தான் ஏதோ பட்டம் பதவிகள் கிடைக்கும்! நமது எண்ணங்கள் திசை மாறிப்போகும்! நமது பல தொழில்கள் இப்படித்தான் அரசியல்வாதிகளை நம்பி ஒன்றுமில்லாமல் போய் விட்டன.

இப்போது சொல்லுகிறேன். மன உறுதியோடு செயல்படுங்கள். நீங்கள் வெற்றி பெற்று விட்டால் உங்களைத் தேடி பட்டம் பதவிகள் தானாக வரும் என்பதை மறந்து விடாதீர்கள்.

நீங்கள் வெற்றி பெறும் வரை உங்கள் கவனத்தைச் சிதறிடிக்காதீர்கள்.

No comments:

Post a Comment