Friday 17 January 2020

வாருங்கள் நாமும் முன்னேறுவோம்! (18)

நான் பட்ட கஷ்டம்.....!

எனக்குத் தெரிந்து பல தொழில்களை நாம் சீனர்களுக்கு விட்டுக் கொடுத்து விட்டோம்.

குறிப்பாக சிகையலங்காரம்,  கேக் வகைகள் அதனை ஒட்டிய இனிப்பு வகைகள்,  ச்லவைத் தொழில், தையல் தொழில். அச்சகத் தொழில் - இப்படி பல தொழில்கள் நம் கையை விட்டுப் போய்விட்டன. ஏன்?  சீனர்களிடம் போய்விட்டன என தாராளமாகச் சொல்லலாம்.

அதற்கு ஒரே காரணம் ஒருசில தொழில்கள் கேவலம் என்று சொல்லி நாமே ஒதுக்கி விட்டோம். ஒரு சில தொழில்கள் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல நாம் அக்கறை காட்டவில்லை.

சிகைத் தொழில், சலைவைத் தொழில் என்பதை நாம் ஒரு வியாபாரமாக பார்க்கவில்லை. அதனை சமூகத்தின் அவலமாக பார்த்து நாம் பழகி விட்டோம்.  அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்றவனும் அது குடிகாரர்களுக்கான ஒரு தொழிலாக மாற்றிவிட்டான்!

இப்போது இந்த தொழில்கள் சீனர்களுக்கு முற்றிலுமாக கை மாறிய பிறகு தான் நமக்குப் புத்தி வந்தது! இப்போது பெரிய மனமாற்றம் நம்மிடையே வந்திருக்கிறது. இப்போது நமது இனத்தவரும் அந்த தொழில்கள் பையை நிரப்பும் தொழில்களாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அதனால் தான் சிகையலங்கார கடைகள் கடைகளாக இல்லை. நவீன ஒப்பனை தொழிலகங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. சலவைத் தொழில்கள் இப்போது நவீன இயந்திரங்களோடு நர்த்தனம் ஆடிக் கொண்டிருக்கின்றன.  போட்டிகள் இருந்தாலும் போதுமான வரவுகளைப் பார்க்க ஆராம்பித்து விட்டனர். ஆக இந்த தொழில்களுக்கு இனி உயர் ஜாதி முத்திரை தான்! ஆமாம், பணம் இருந்தால் உயர்ந்த ஜாதி!

ஒரு சில தொழில்களுக்கு நாமே குழி பறித்துக் கொண்டோம். அடுத்த தலைமுறைக்கு நாம் எடுத்துச் செல்லவில்லை. ஒரே காரணம் தான். "நான் பட்ட கஷ்டம் என் பிள்ளைகள் படக்கூடாது!" என்கிற நல்லெண்ணம் தான் காரணம்.  அதனால் அவர்கள் டாக்டர் ஆக வேண்டும்,  வழக்கறிஞர் ஆக வேண்டும் என்று நம் பிள்ளைகள் மேல்  நமது கனவுகளைத் திணித்து அவர்களை தொழில் துறையில் இருந்து ஓட செய்துவிட்டோம்!

எல்லாத் தொழில்களிலும் கஷ்டம் உண்டு, நஷ்டம் உண்டு.  வியர்வை சிந்தித்தான் ஒவ்வொருவரும் வாழ்க்கையை வாழ வேண்டும். டாக்டர்கள், வழக்கறிஞர்கள் படுகின்ற கஷ்டம் அவர்களுக்குத் தான் தெரியும். அவர்கள் விரும்பிய தொழில் அது தான் என்றால் அவர்களுக்கு ஊக்கம் ஊட்டங்கள்.

ஆனால் வியாபாரத்தில் ஆர்வம் காட்டுபவர்களை வேறு பாதைகளுக்குத்  திசை திருப்பாதீர்கள்.  நம்முடைய தொழில்களை அடுத்த கட்டத்துக்கு நாம் எடுத்துச் செல்வது நமது கடமை.  நமது பாரம்பரிய தொழில்களை நவீனத் தொழில்களாக மாற்றும் திறமை படித்தவர்களுக்கே உண்டு. அதனை நாம் தவற விட்டுவிட்டோம்.

இனி  நமது தொழில்களை  அடுத்த  தலைமுறைக்கு எடுத்துச் செல்லுவதைப் பற்றி யோசிப்போம்.

இருக்கிற தொழிலையும் வங்காள தேசத்தவருக்கு விற்றுவிட்டுப் போகின்ற நிலை இனி வேண்டாம். 

சிறிய தொழிலாக இருந்தாலும் அது நமது கையில் இருக்க வேண்டும். நமது வாரிசுகளின் கையில் இருக்க வேண்டும்.

சீனர்கள் செய்கிறார்களே அவர்களுக்கு மட்டும் கஷ்டம் இல்லையா?  எல்லாம் நாம் பார்க்கும் பார்வையில்!

No comments:

Post a Comment