Thursday 2 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (2)

பொருளாதார வலிமை

நாம் முன்னேறி விட்டோம் என்றால் எதனை வைத்து  அதை அறிந்து கொள்ளுவது?  ஒன்றே ஒன்று தான். அது தான் பொருளாதார வலிமை. மற்றைவைகள் எல்லாம் அதன் பின்னால் வருவது தான். இது தான் உலகியல் பார்வை!  நாமும் ஏற்றுக் கொள்வோம்!

பொருளாதார வலிமையை எப்படிப் பெருக்கிக் கொள்வது?   வீட்டுக்கு ஒரு பட்டதாரி என்று சொல்லுவார்களே அதே போல வீட்டுக்கு ஒரு வியாபாரி என்கிற நிலை நமக்கு வர வேண்டும்.

அதே சமயத்தில் "நான் படித்து விட்டேன், அதற்கேற்ற வேலை எனக்கு  வேண்டும்!" என்று ஒரு சிலர்  வேலை அவர்களைத் தேடி வரும் வரை காத்துக் கொண்டிருப்பார்கள்!

நாட்டின் நிலைமை அப்படி இல்லை. கிடைத்த வேலையைப் பற்றிக் கொள்ளுங்கள் என்பது தான் நமது அறிவுரை.

ஆனால் நீங்கள் எந்தக் காலத்திலும் வேலைக்காக காத்திருக்காதீர்கள். ஒன்று கிடைத்த வேலையைச் செய்யுங்கள். அல்லது ஏதோ ஒரு நேரடித் தொழிலில் ஈடுபட்டு விடுங்கள். இதன் மூலம் ஒரு வேலையை நீங்கள் கற்றுக் கொள்கிறீர்கள்.  அதே சமயத்தில் புதிய அனுபவத்தையும் பெற்றுக் கொள்கிறீர்கள். பொருளாதார வலிமையும் உங்களுக்கு வந்து சேரும்.

சும்மா இருப்பது சோத்துக்கு நஷ்டம் என்பார்கள்.  'சும்மா' என்பது மட்டும் வேண்டாம்!

எந்த வேலையைச் செய்தாலும் ஒரு வியாபார சிந்தனையோடு செய்யுங்கள். வேலையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் நெளிவு சுளிவுகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.

அச்சகத்தில் வேலை செய்த நண்பர் ஒருவர் பிற்காலத்தில் தானே சொந்தமாக ஓர் அச்சகத்தை நடத்தி வெற்றிகரமாக தனது பிள்ளைகளுக்கு அந்தத் தொழிலை விட்டுச் சென்றார். இன்று அந்த தொழில் ஆலமரம் போல் தழைத்தோங்கி நிற்கிறது.

இப்படித்தான் ஒவ்வொரு தொழிலும்.  எந்தத் தொழிலை எடுத்துக் கொண்டாலும் அதன் ஆரம்பம் என்னவோ  சிறிது தான். 

தமிழர்களின் பொருளாதாரம் வலிமை அடைய வேண்டும்.  அதற்குப் பொருளாதார சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தமிழர்கள் தலை நிமிர பொருளாதார வலிமை ஒன்றே வழி!

No comments:

Post a Comment