Sunday, 19 January 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (20)
தொழில் சாம்ராஜ்யங்களை உருவாக்குவோம்
இன்றைய ஒவ்வொரு சிறிய தொழிலும் நாளைய பிரமாண்ட தொழில் சாம்ராஜ்யம் என்பதை மறந்து விடாதீர்கள்.
உலகக் கோடிஸ்வரர் பில் கேட்ஸ் லிருந்து நம்ம ஊர் ஹோண்டா லோ பூன் சியு வரை இப்படித்தான் நடந்து வந்திருக்கிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை.
எல்லாமே சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டவை. பின்னாளில் அந்த சிறிய அளவுகள் மாபெரும் பெரிய அளவுகளாக மாறிவிட்டன! அவ்வளவு தான்.
அதனால் இப்போது நீங்கள் செய்கின்ற சிறிய தொழில்கள் நாளைய பெரிய தோழில்கள். அதில் சாந்தேகமில்லை. ஒரே நிபந்தனை. உங்கள் தொழிலில் தொடர்ச்சி என்பது இருக்க வேண்டும். அந்த சிறிய தொழிலை பெரிய தொழிலாக மாற்றும் முயற்சிகள் இருக்க வேண்டும்.
சிறிய தொழில் செய்யும் ஒரு நண்பரை எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும் என்றால் ....? அதாவது எனது பள்ளி நாள்களிலிருந்தே எனக்குத் தெரியும். அப்போது அப்பா செய்தார். இப்போது அவர் இல்லை. இப்போது அவரின் இரண்டு பிள்ளைகளும் செய்கிறார்கள்.
குறை சொல்லவில்லை. ஆனால் நான் சொல்லாமலேயே ஒரு குறை பளிச்சென்று தெரியும்.. அப்பா காலத்தில் அந்த தொழில் எப்படி இருந்ததோ அப்படியே தான் இப்போதும் இருக்கிறது! அப்பாவை விட பிள்ளைகள் கொஞ்சம் அதிகம் படித்தவர்கள். படிக்காத அப்பா எப்படி தைரியமாக ஒரு தொழிலை நடத்தி சிறப்பாக நடத்தி வந்தாரோ அத்தோடு அனைத்தும் முடிந்தது! அப்பாவுக்கு இருந்த துணிவு இவர்களுக்கு இல்லை! இத்தனைக்கும் அவர்களைச் சுற்றி அனைவரும் வியாபாரிகள் அதிலும் குறிப்பாக சீனர்கள்! சுற்றப்புறத்தை பார்த்தாவது இவர்களுக்கு ஓர் உத்வேகம் வந்திருக்க வேண்டும். ஆனாலும் வரவில்லை!
தொழில் செய்பவர்களுக்கு இலட்சியம் இருக்க வேண்டும். முன்னேறுவதற்கான அடுத்த வழி என்ன, வேறு என்ன செய்ய முடியும் என்கிற சிந்தனை இருக்க வேண்டும்.
தொழிலுக்கு வந்து விட்டோம். இனி நமது இலக்கு என்னவாக இருக்க வேண்டும் என்கிற தேடல் எப்போதும் வேண்டும். தொழிலுக்கு வருவது எளிதான காரியம் அல்ல. அப்பாவே ஒரு தொழிலை விட்டுவிட்டுப் போகும் போது அதனை வளர்ப்பது அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லுவது பிள்ளைகளின் தலையாய கடமை.
குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டு இருந்தால் உடம்பு தான் குண்டாகுமே தவிர மூளை முந்தானைப் போட்டு மூடிக் கொள்ளும்!
நமது தாய் தந்தையர் அல்லது முன்னோர்கள் நமக்கு ஒரு வழியைக் காட்டி விட்டார்கள். இப்போது தொழில் நமது கையில். நமது முயற்சி என்ன என்பதை இந்த உலகம் தெரிந்து கொள்ள வேண்டும். அது தான் நமது முன்னோர்களுக்கு நாம் செய்யும் மரியாதை.
ஒரு தலைமுறை பல கஷ்டங்களுக்கு இடையே உருவாக்கிய ஒரு தொழிலை அடுத்த தலைமுறை அதனை தொழில் சாம்ராஜ்யமாக உருவாக்க வேண்டும்.
அது தான் நமது பெருமை!
Labels:
கல்கண்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment