Thursday, 2 January 2020
கல்வி அமைச்சர் பதவி விலகல்?
கல்வி அமைச்சர் பதவி விலகினார் என்கிற செய்தி மற்றவர்களுக்கு எப்படியோ என்னைப் பொறுத்தவரை அதனைச் சரியான நடவடிக்கையாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பொதுவாக அமைச்சர்கள் யாராக இருந்தாலும் சரி அரசாங்கத்தின் கொள்கைகளைத்தான் செயல்படுத்த முடியும். இன்று இவர் போகிறார். நாளை வேறொருவர் வருகிறார். அவரால் மட்டும் என்ன செய்து விட முடியும்?
புதிதாக வருகிறவருக்கு ஒன்றும் விசேஷ சலுகைகள் ஒன்றும் கிடையாது. அதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவரால் அரசாங்கக் கொள்கைகளை எதனையும் மாற்றி அமைத்து விட முடியாது. இருக்கிற கொள்கைகளை அமல்படுத்த வேண்டும். அது தான் அவருடைய வேலை!
பிரதமர் துறை துணை அமைச்சர் பொன். வேதமூர்த்தி பதவி ஏற்ற போது இந்தியர்களுக்குக் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்று எதிர்பார்த்தோம். எதுவும் கொட்டவில்லை! இப்போது அவர் யாருக்கு அமைச்சர் என்று யாருக்கும் தெரியவில்லை! ஏதோ பூர்விகக் குடியினருக்காகவது அவரால் சேவை ஆற்ற முடிகிறதே என்று திருப்தி அடைவோம்!
எந்தப் பதவியாக இருந்தாலும் அனைத்துத் தரப்பு மக்களையும் திருப்திபடுத்த முடியாது என்பது நமக்குத் தெரிந்தது தான்.
கல்வி அமைச்சர் பதவி என்பது மிகவும் சவாலான ஒரு பதவி. அது மொழி சார்ந்தது. ஒவ்வொரு இனத்தவரும் ஒவ்வொரு பக்கம் இழுத்துக் கொண்டு போகிறார்கள்! முந்தைய அரசாங்கத்தின் போது கல்விக் கொள்கைகளை ஆதரித்தவர்கள் இப்போது எதிரிகளாகச் செயல்படுகிறார்கள். அத மட்டும் அல்ல இன ரீதியாக பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள்!
இவர்கள் எல்லாம் அடுத்த ஆட்சியை இனப்பகையை உருவாக்குவதன் மூலம் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும் என நினைக்கிறார்கள்!
ஆக, இப்போது யார் கல்வி அமைச்சராக வந்தாலும் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. கொள்கைகள் அப்படியே தான் இருக்கின்றன. செயல்படுத்துவதில் தான் சிக்கல்!
கல்வி அமைச்சர் மஸ்லி இன்னும் சில காலம் நீடித்திருக்கலாம்!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment