வியாபாரம் குறையும் போது என்ன செய்யலாம்?
வியாபாரம் என்பது எப்போதும் கொடிகட்டிப் பறக்கும் என்பதை மறந்து விடுங்கள்! எப்போதும் சீராக இருக்கும் என்பதையும் மறந்து விடுங்கள்!
சீராக, ஒரே மாதிரியாக வியாபாரம் இருக்கும் என்பதை கனவிலும் நினைத்துப் பார்க்காதீர்கள்.
ஏற்றம் இறக்கம் என்பதெல்லாம் வியாபாரத்தில் சாதாரண விஷயம். வியாபாரம் அப்படித்தான் இருக்கும். ஒரு சில கிழமைகளில் வியாபாரம் அமோகமாக இருக்கும். ஒரு சில கிழமைகளில் மந்தமாக இருக்கும். ஒரு சில மாதங்களில் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கும்.ஒருசில மாதங்களில் வியாபாரம் நமக்குப் பாரத்தைக் கொடுக்கும்! வியாபாரத்தில் இதனை எல்லாம் அனுசரித்துத் தான் போக வேண்டும்.
எல்லா வியாபாரங்களும் அப்படித்தான். சீனனுக்கு ஒரு மாதிரி, மலாய்க்காரனுக்கு ஒரு மாதிரி, இந்தியனுக்கு ஒரு மாதிரி என்பதெல்லாம் ஒன்றுமில்லை.
ஒரே சீராக இருக்க வேண்டுமென்றால் அது மாத சம்பளம் வாங்குபவர்களுக்குத் தான் ஒத்துவரும்.
வியாபாரத்தில் மேடு பள்ளங்கள் உண்டு. வியாபாரம் மேல் நோக்கி இருக்கும் போது ஒரு சிலர் படு அட்டகாசமாக நடந்து கொள்ளுவார்கள். இன்று மேல் நோக்கி இருந்தால் நாளை அது சரிந்து விழலாம்! எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். தினசரி வருமானத்தை அல்லது மாத வருமானத்தைக் கணிப்பது சிரமம். கூடுவதற்கும், குறைவதற்கும் பல காரணிகள் உண்டு.
ஆனால் நாம் தான் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும். வருமானம் அதிகரிக்கும் போது நமது தேவைகளுக்கான பணத்தை ஒதுக்கிவைத்து விட வேண்டும். வாடகை, கல்வி செலவுகள், சம்பளம் - இப்படி தலையாய செலவுகளுக்கு தனியாக எடுத்து வைத்து விட வேண்டும். அதிலும் குறிப்பாக சேமிப்புக்காக ஒரு தோகையை ஒதுக்கி விட வேண்டும்.
அதிக வருமானம் வரும் போது ஆடம்பரத்தைக் காட்ட வேண்டாம்! அடுத்து வருமானம் குறையும் போது அவதிப்பட நேரிடும்! மேலும் வருகின்ற பணம் எல்லாம் நம்முடையது அல்ல. நம்மை நம்பி மொத்த வியாபாரிகள் நமக்கு இரண்டு மூன்று மாதம் கடன் கொடுக்கிறார்கள். அவர்களுக்குச் சேர வேண்டிய கடன்களைக் குறிப்பிட்ட நாள்களுக்குள் கட்டவில்ல என்றால் நம்மால் தொழிலை நகர்த்த முடியாது. அவர்கள் கடன் கொடுப்பதை நிறுத்தி விடுவார்கள். அப்புறம் விற்பதற்குப் பொருள்கள் இல்லாமல் போய்விடும்!
அதனால் வியாபாரம் குறையும் காலத்தில் நிறையப் பொருள்கள் விற்பனைக்கு இருக்க வேண்டும். விற்பனையில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். விற்பனைக் குறைவு என்று கன்னத்தில் கை வைத்துக் கொண்டிருந்தால் இருப்பதையும் இழந்து விடுவோம்!
வியாபாரம் குறையும் போது விற்பனையை அதிகப்படுத்துங்கள்! விளம்பரத்தை அதிகப படுத்துங்கள்.இதை மட்டும் தான் நாம் சொல்ல முடியும்.
மற்றவை உங்கள் புத்திசாலித்தனம்!
No comments:
Post a Comment