சிறு வியாபாரங்களை மதிப்போம்!
இன்று பெரும் பெரும் வியாபார நிறுவனங்கள் அனைத்தும் மிக எளிமையான துவக்கத்தைக் கொண்டவை என்பது ஒன்றும் புதிய செய்தி அல்ல.
இன்றைய பெரிய நிறுவனங்கள் அனைத்தும் ஒரே நாளில் வானத்தில் இருந்து குதித்து விடவில்லை! ஒரு மனிதர், ஒரே மனிதர் அவருடைய உழைப்பு அல்லது கணவன் - மனைவி உழைப்பு, அல்லது ஒரு குடும்பத்தினரின் உழைப்பு, அவர்களுடைய தியாகங்கள் = இப்படித் தான் பல நிறுவனங்கள் உருவகியிருக்கின்றன! அதிலும் தனி மனித உழைப்புத் தான் அதிகம்.
ஒரு வியாபாரி வானொலியில் தனது அனுபவத்தைச் சொன்னார். கையில் இருந்த ஐம்பது வெள்ளியில் தான் தனது வியாபாரத்தைத் தொடங்கினாராம். தானே செய்த பொருட்களை ஒவ்வொரு தோட்டமாக சென்று அந்தப் பொருட்களை விற்றாராம். இப்படித்தான் அவரது நிறுவனத்தை அவர் வளர்த்திருக்கிறார். இன்று அவரது நிறுவனம் பல நாடுகளுக்கு தனது பொருட்களை அனுப்புகின்றது.
பொதுவாக சிறு வியாபாரிகளின் ஆரம்ப காலம் என்பது மிகவும் கஷ்டமான காலம். இந்த நேரத்தில் அவர்களின் பொருட்களை நாம் வாங்கி ஆதரிப்பது அவர்களுக்கு அது மிகவும் பேருதவியாக இருக்கும். அவர்கள் மரியாதையாக அழைப்பதும் து அவர்களுக்கு ஓர் உற்சாகத்தைத் தரும்.
அஞ்சடியில் வியாபாரம் செய்யும் சிறு சிறு வியாபாரிகளிடம் நான் ஏதாவது ஒரு பொருளை வாங்கி அவர்களுக்கு ஆதரவு கொடுப்பது எனது வழக்கம். அத்தோடு அவர்களை நான் "முதலாளி" என்று அழைப்பதும் உண்டு. பாட்டுப் புத்தகங்கள், நாளிதழ்கள் விற்பனை செய்த ஒரு நண்பரை நான் முதலாளி என்று தான் அழைப்பேன். பிற்காலத்தில் அவர் ஓர் உணவகத்தைத் தொடங்கி பெரிய முதலாளியாகி விட்டார். பின்னர் அவரே இரண்டு உணவகங்களுக்குச் சொந்தக்காரர் ஆனார். . இந்த முன்னேற்றமெல்லாம் அவருடைய உழைப்பு தானே தவிர வேறொன்றுமில்லை. நாம் அவர்களை முதலாளி என்று அழைப்பதன் மூலம் அவர்கள் முதலாளிகள் ஆக வேண்டும் என்கிற ஆசையை நாம் உசுப்பிவிடுகிறோம்! நம் இனத்தாருக்கு நாம் தானே தூண்டுகோளாக இருக்க வேண்டும்!
நம்மிடையே ஐஸ் செண்டோல் வியாபாராம் செய்பவர்கள், கச்சாங்பூத்தே வியாபாரம் செய்பவர்கள், தோசை தேனீர் விற்பவர்கள், பூ வியாபாரம் செய்பவர்கள் - இப்படி எத்தனையோ பேர் சிறு சிறு வியாபாரங்கள் செய்வதில் ஈடுபட்டிருக்கின்ற்னர். அவர்கள் எல்லாம் இன்றைய சிறு சிறு முதலாளிகள். நாளைய தொழில் அதிபர்கள்.
சிறு வியாபாரிகளை அலட்சியம் செய்யாதீர்கள். ஆதரவுக் கரம் நீட்டுங்கள். அவர்களும் முன்னேற்றம் காணட்டும்! அதைவிட அவர்களை முதலாளி என்று அழைத்துப் பெருமைப் படுத்துங்கள். அதுவே அவர்களை நாளை முதலாளியாக்கும் ஊக்குசக்தியாக அமையும்!
No comments:
Post a Comment