Monday, 20 January 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (21)
நாட்டையே வீணாக்கிட்டானுங்க..!
நாட்டையே குட்டிச் சுவராக்கிட்டானுங்க! ஆளுங்ககிட்ட கையில காசே இல்லை! எதை வாங்குவாங்க? எல்லாம் விலை ஏறிருச்சி! சம்பளம் மட்டும் ஏறல!
இப்படிபேசுபவர்களை நாம் பார்த்திருக்கலாம். ஏன் நாம் கூட இப்படி பேசுபவராக இருக்கலாம்!
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இப்படித் தான் பேசுவார். அவரும் ஒரு சிறிய தொழிலை செய்து வருபவர். அந்த தொழிலை அவரால் விட முடியாது. காரணம் யாரிடமும் போய் வேலை செய்த பழக்கம் அவருக்கில்லை. முக்கி முனகிக் கொண்டு ஒவ்வொரு நாளையும் கழித்துக் கொண்டு வருபவர்!
ஆனாலும் என்னிடம் ஒரு கேள்வி உண்டு. இப்படி பேசுபவர்கள் பலர் நம்மிடையே உண்டு. சீனர்கள் உண்டு,மலாய்க்காரர்கள் உண்டு, இந்தியர்களும் உண்டு. இது பொதுவானது.
மலாய்க்கரார்களும் சரி, இந்தியர்களும் சரி நாம் உண்மையைத்தான் பேசுகிறோம். சீனர்களும் உண்மையைத் தான் பேசுகிறார்கள். ஒரு வித்தியாசம். நாம் பேசுவதை மனத்தில் ஆழ பதித்துவிடுகிறோம். அது தான் உண்மை என்று நூறு விழுக்காடு நம்புகிறோம். ஏதாவது வேலை செய்து பிழைப்போம் என்கிற நிலைக்கு நாம் வந்து விடுகிறோம்!
ஆனால் இதே கருத்தைக் கொண்டிருக்கும் சீனர்கள் வேலைக்குப் போவதைப் பற்றியோ, தொழிலை மாற்றிக் கொள்ளுவதைப் பற்றியோ சிந்திப்பதில்லை. அவர்கள் வழக்கம் போல் தங்களது தொழில்களைப் பார்த்துக் கொண்டும் வளர்த்துக் கொண்டும் போய்க் கொண்டே இருக்கிறார்கள்! அது எப்படி?
ஒன்று: தொழில் தான் சீனர்களின் வாழ்வாதாரம். வேலைக்குப் போவோம் என்னும் எண்ணமே அவர்களுக்கு எழுவதில்லை! தொழிலை வளர்த்துக் கொண்டே போக வேண்டும் என்கிற எண்ணம் தான் அவர்களிடம் மேலோங்கி நிற்கிறது! நாமோ எல்லாக் காலங்களிலும் வேலைக்குச் சம்பளம் எவ்வளவு என்று கணக்குப் போட்டு வாழ்ந்த கூட்டம்! அந்த ஞாபகத்தை நம்மால் விட முடியவில்லை!
சரி விலைவாசிகள் ஏறிவிட்டன. சம்பளம் மட்டும் உயரவில்லை என்பது சரியாக இருக்கலாம். ஒன்றை நாம் மறந்து விட்டோம்.
உணவகங்களைப் பாருங்கள். கூட்டம் ஏதாவது குறைந்திருக்கிறதா? வீட்டில் திருமணம் அதற்காக நகை நட்டுகள், துணிமணிகள் வாங்காமலா இருக்கிறோம். கல்லூரிகளுக்குப் போகும் பிள்ளைகள் கணினிகள் வாங்காமலா இருக்கிறார்கள். சந்தைகளைப் பாருங்கள் காய்கறிகள் வாங்காமலா இருக்கிறோம்! வீட்டில் பிள்ளைகள் கவுச்சி இல்லாமல் சாப்பிடமாட்டர்கள். அவர்களுக்கு, இறைச்சி, மீன்கள் தேவை. வாங்கிக் கொடுக்காமலா இருக்கிறோம். போக்குவரத்துக்குக் கார் இல்லாமல் கஷ்டமாக இருக்கிறது. ஒரு கார் தேவை வாங்காமலா இருக்கிறோம்!
இதெல்லாம் நடந்து தான் ஆக வேண்டும். தினசரி வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை. கையில் பணம் இல்லை என்பதற்காக வர்த்தக நிலையங்களை மூடிவிட்டுப் போய்விட முடியாது! நாம் தான் அப்படி ஒரு முடிவை எடுக்கிறோம். சீனர்கள் வழக்கம் போல தங்களது வியாபாரங்களை நடத்திக் கொண்டும் பொருளாதாரத்தில் உயர்ந்து கொண்டும் இருக்கிறார்கள்!
நாடு நாசமாகி விட்டது என்று நாம் சொன்னாலும் அந்த நாசமாகி போன நிலையிலும் சீனர்களின் வளர்ச்சியை யாராலும் நிறுத்த முடியவில்லை! காரணம் என்ன தான் நாசம் என்று நாம் சொன்னாலும் அவர்களுக்கு அது ஒரு வாய்ப்பு என்று பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள்!
அதனால் நாடு நன்றாகவே இருக்கிறது என்கிற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்!
தொடர்ந்து நாம் நமது தொழில்களை வளர்த்து எடுக்கின்ற வேலைகளைப் பார்ப்போம்.
வியாபாரம் குறையும் போது இன்னும் அதிகமான உழைப்பைப் போட வேண்டும். இன்னும் அதிகமான விளம்பரங்களைப் பயன்படுத்த வேண்டும்.
இது தான் வழி! வளர்க!
Labels:
கல்கண்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment