Tuesday, 21 January 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (22)
ஆரம்பமே கடனா? வேண்டவே வேண்டாம்!
தொழில் செய்பவர்கள் கடன் இல்லாமல் தொழிலை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல முடியாது என்பது உண்மை தான். ஆனால் அந்த கடன் எப்போது உங்களுக்குத் தேவை என்பது தான் நீங்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விஷயம்.
தொழில் தொடங்கி ஓர் ஆண்டுக்குள் நீங்கள் பெரிதாக எதனையும் சாதித்திருக்க மாட்டீர்கள். தொழிலில் வளச்சி இருக்கிறதா, வளர்ச்சி தெரிகிறதா என்பதையெல்லாம் உங்களால் துல்லியமாக கணக்கிட முடியாது.
அதனைத் தெரிந்து கொள்ள நீங்கள் பல விஷயங்களைச் செய்து கொண்டு வர வேண்டும். முதலில் ஆரம்ப முதலீடு, தினசரி கணக்கு வழக்குகள், போக்குவரத்து செலவுகள், உங்களின் உழைப்பு, உங்களுக்கான சம்பளம் - இவைகள் எல்லாம் ஒவ்வொரு மாதமும் நீங்கள் எழுதி வைக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் உங்களின் நிதி நிலைமை என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
உங்களின் மொத்த வியாபாரிகளிடம் வாங்கும் பொருட்கள் அளவுக்கு மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை விற்பனையாவதில் சுணக்கம் ஏற்பட்டால் நீங்கள் பாதிப்பு அடைவீர்கள். ஒரு சில வேளைகளில் மொத்த வியாபாரிகள் விற்பனையாகாத பொருள்களை உங்களிடன் தாராளமாகத் தள்ளி விடுவதில் தயாராக இருப்பார்கள்!
மொத்த வியாபாரிகளிடமும் உங்கள் கடன்களை அதிகம் வைத்துக் கொள்ளாதீர்கள். எல்லாமே ஒர் அளவு தான்.
விற்பனை ஆகும் பொருள்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுங்கள். மொத்த வியபாரிகளுடனான கடன்களையும் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். கடன் உங்களை மீறி செல்லக் கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.
உங்கள் தொழில் வளர்ந்துவிட்ட பிறகு நீங்கள் தாராளமாக கடன் வாங்கலாம். கடன் வாங்காமல் தொழிலை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்த செல்ல முடியாது என்பது உண்மை தான். இலட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் வங்கிகளிலிருந்து கடன் வாங்குவதில் பிரச்சனை இல்லை.
ஆனால் ஆரம்ப காலங்களில் ஒரு சில ஆயிரங்கள் கூட நம்மை வீழ்த்திவிடும்! நம்மை தூக்கம் இல்லாமல் செய்து விடும். முறையாக அதனை பயன்படுத்த தெரியாவிட்டால் பிறகு எல்லாக் காலத்திலும் நமக்கும் வங்கிக்கும் உள்ள இடைவேளி அதிகமாகி விடும்.
அதனால் கடன் வாங்க வேண்டுமா? குறைந்தபட்சம், நீங்கள் தொழிலில் ஒரு பத்து ஆண்டுகளாவது தாக்குப்பிடித்த பிறகு, கடன் வாங்குவது பற்றி யோசியுங்கள். வெற்றிகரமான தொழிலுக்கு வங்கிகள் காத்துக் கிடக்கின்றன.
கடனா? யோசியுங்கள்!
Labels:
கல்கண்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment