Wednesday, 1 January 2020
வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்!! (1)
வாருங்கள் நாமும் முன்னேறுவோம்!
இனிமேலும் யாருக்காகவும் காத்திருக்க வேண்டாம். காத்திருந்தது போதும்.
மற்றவர்களின் கதைகள் எல்லாம் நம்மிடையே நிறையவே இருக்கின்றன. மற்றவர்களின் முன்னேற்றத்தைப் பார்த்து மூக்கில் கைவைத்தது போதும்.
இப்போது நமது நேரம். நம்மைப் பார்த்து மற்றவர்கள் வியக்க வேண்டும். வேர்த்துக் கொட்ட வேண்டும்!
முன்னேற்றம் என்று எதைப் பற்றி சொல்லுகின்றோம். இன்றைய உலகம் நம்மிடம் உள்ள காசு பணத்தை வைத்துத் தான் மதிப்பிடுகிறது.
காசு பணம், கல்வி - இதற்குத் தான் முதன்மை. காசு பணம் இருந்தால் அனைத்தையும் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது! அந்த காசு பணத்தை பாதுகாத்துக் கொள்ள கல்வி தேவை.
கல்வி இருந்தால் பணம் சம்பாதிக்க ஒரு வழியைத் தேடிக் கொள்ளுகிறோம் . சம்பாதித்த பணத்தை எப்படி செலவழிப்பது என்று கற்றுக் கொள்ளுகிறோம்.
எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவைகள் தான்.
பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கலாம். ஆனால் உங்கள் வழி எது என்பது தான் முக்கியம். ஒரே ஒரு வழியைத்தான் நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும். அதுவும் நீங்கள் விரும்பும் ஒரே வழி.
அந்த வழி எது என்பதைத் தேர்ந்தெடுங்கள். அந்த வழியிலேயே உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள்.
எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்பது தவறான வழி! நீங்கள் எங்கே போகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரிய வேண்டும். அப்போது தான் உங்கள் கவனம் சிதறாது.
பணம் சம்பாதித்துப் பணக்காரனாவது அவ்வளவு முக்கியமா? ஆமாம், முக்கியம் தான். பணம் இல்லாதவனை இல்லாளும் விரும்பால் என்பது உண்மை தானே!
சரி, நம்மைச் சுற்றி இருப்பவர்களைப் பாருங்கள் பணம் இல்லாத நமது சமூகத்திற்கு என்ன மரியாதைக் கிடைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாதா, என்ன?
அதே சமயத்தில் சீன சமூகத்தினருக்குக் கிடைக்கும் மரியாதையைப் பற்றி சொல்ல வேண்டுமா? சொல்லவே வேண்டாம் அதுவும் நமக்குத் தெரிந்தது தான்!
மலாய் சமூகத்திற்கு உள்ள மரியாதை என்ன? கல்வியில் அவர்களின் மாபெரும் முன்னேற்றம். அடுத்து தொழில் துறையில் அவர்களின் ஏற்றமிகு வளர்ச்சி.
நமது வளர்ச்சியில் எப்போதுமே ஒரு தேக்கம் உண்டு. தொழில் செய்வதாகட்டும் அல்லது கல்வியாகட்டும் மகிழ்ச்சியடையும்படியாக ஒன்றும் இல்லை என்பது தான்!
இவைகள் மாற்றப்பட வேண்டும். நமது வாழ்க்கை முறையை மாற்றியமைக்க வேண்டும். இதற்காக யாரும் தலைவர்கள் வரமாட்டார்கள். நாம் தான் தலைவர்கள். நாம் தான் நமது தலைவிதியை மாற்றியமைக்க வேண்டும்.
Labels:
கல்கண்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment