Thursday 30 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்..! (31)

எவ்வளவு சேமிக்கலாம்...?

தொழில் செய்பவர்களுக்கு  சேமிப்பு அவசியமா என்று ஒரு சிலர் நினைக்கின்றனர். சேமிப்பு என்பது பொதுவானது.  அதனைப் பிரித்துப் பார்ப்பது என்பது தேவையற்றது.

ஒரு சிலர் "நாம் தான் தினசரி பணத்தைப் பார்க்கிறோம்.  இதில் வேறு தனியாக சேமிப்பா?" என்று கேள்வி எழுப்புகின்றனர்.  தினசரி நீங்கள் பார்க்கின்ற பணம் உங்களுடையதல்ல. பலருடைய பணத்தை நீங்கள் கையாளுகிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். 

உங்களுடைய வருமானத்தில் முதல் செலவு என்பது சேமிப்பு தான். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? அது தான் உங்கள் செலவுகளில் முதன்மையானது. மற்ற செலவுகள் எல்லாம் அதன் பின்னால் தான் வர வேண்டும்.   வீட்டு வாடகை, கார் தவணை, தர்மம் செய்தல் இப்படி எந்த செலவாக இருந்தாலும்  சேமிப்புக்குப் பின் தான் வர வேண்டும். 

சேமிக்க வேண்டும் என்பது சரி ஆனால் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதில் ஏதேனும் வரைமுறை உண்டா? பத்து விழுக்காடு என்கின்றனர் சிலர், இருபது விழுக்காடு என்கின்றனர் சிலர்.  அதற்கு மேல் முடிந்தாலும் பாதகமில்லை. அல்லது குறைந்தாலும் பாதகமில்லை. தொடர்ந்து சேமிக்க வேண்டும் என்பதே முக்கியம்.

ஒன்றுமே முடியவில்லை என்றால் தினசரி பத்து வெள்ளியை உங்களது சேமிப்பாக ஒதுக்கி விடுங்கள். அதனை முடிந்தவரை வங்கியில் போட்டு விடுங்கள். அவ்வளவு தான்.  உங்களுக்கு அறுபது வயது ஆகும் போது மட்டும் அதில் கை வைத்தால் போகும். பத்து வெள்ளி என்பது ஒரு சிறிய தொகை தான். ஆனால் அதனை ஒரு சிறிய கணக்குப் போட்டுப் பாருங்கள்.  ஓர் ஆண்டு ரிம 3650.00. பத்து ஆண்டுகள் ரிம 36500.00  இருபது ஆண்டுகள் ரி.ம.73000.00. முப்பது ஆண்டுகள் ரிம 109,500.00. 

இந்த  சிறிய சேமிப்பை ஒரு நீண்ட கால சேமிப்பாக கணக்குப் பண்ணி பாருங்கள் அது எப்படி பெரிய ஒரு தொகையாக மாறுகிறது என்பது புரியும். எல்லாமே இப்படித்தான் கணக்குப்போட்டு பழகிக் கொள்ள வேண்டும். ஒரே நிபந்தனை எந்தக் காரணத்தைக் கொண்டும் அதில் கை வைக்கக் கூடாது என்பது மட்டும் தான்.

எவ்வளவு சேமிக்கலாம்? எவ்வளவு ஆனாலும் இருக்கட்டும்.  சேமிப்பு என்பது கண்டிப்பாக இருக்க வேண்டும். 

சேமிப்பு மட்டுமே நம்மை தலை  நிமிர வைக்கும்!

No comments:

Post a Comment