Sunday 12 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (13)

தொழில் அனுபவமில்லையா? என்ன செய்யலாம்"

தொழிலில் அனுபவம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. ஒரு சிலர் நேரடியாக தொழிலில் இறங்கிவிடுவர்.  

பையில் பணம் இருந்தால் பயப்பட ஒன்றுமில்லை. ஆனால் சிறிய முதலீடு, மனதிலோ பெரிய ஆசை. அத்தோடு அனுபவமும் இல்லை - இவர்கள் நிலை என்ன?

என்னைக் கேட்டால் ஏதாவது, ஏதோ ஒரு துறையில் அனுவம் இருந்தால்கூட அதனை நீங்கள் பயன் படுத்திக் கொள்ளலாம். 

சான்றாக நேரடித் தொழிலை எடுத்துக் கொள்ளுங்கள்.  நேரடித் தொழில்கள் என்னும் போது நம் கண் முன் நிற்பது காப்புறுதி நிறுவனங்கள் தாம். காப்புறுதி விற்பனை என்பது கையில் எந்த ஒரு பொருளும் இல்லாத நிலையில் மனிதர்களின் பலவீனங்களை வைத்தே செய்யப்படும் ஒரு தொழில்.

ஆனால் பொருள்களை வைத்து விற்பனை செய்யும் பல நேரடி நிறுவனங்கள் இருக்கின்றன. எல்லா வித பொருள்களையும் இந்த நிறுவனங்கள் விற்கின்றன. வெளி நாட்டு நிறுவனங்களோடு உள்நாட்டு நிறுவனங்களும் இவர்களோடு போட்டி போடுகின்றன. 

அது மட்டும் அல்ல நமது இந்திய நிறுவனங்களும் பல இந்த நேரடித் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றன. துணிமணிகள் விற்பனை,  பாரம்பரிய மருந்து வகைகள் என்று பல நேரடி நிறுவனங்கள் ஈடுபட்டிருக்கின்றன.

இந்த நேரடித் தொழிலில்கள் ஈடுபடும் பல குடும்பப் பெண்கள், பெரியவர்கள், சிறியவர்கள் பலர் பயன் பெறுகின்றனர். வேலை செய்து கொண்டே பகுதி நேரமாக மருந்து வகைகளை விற்பனை செய்யும் ஒரு பெண்மணியை எனக்குத் தெரியும்.  குறைந்தபட்சம் மாதம் 700 வெள்ளி வரை சம்பாதிக்கிறார்.  அது மட்டும் அல்ல. வேலை கிடைக்காத நிலையில் இருந்த தனது மகளை அவரை முழு நேர விற்பனையாளராக மாற்றிவிட்டார். மகள், அம்மாவை விட பல மடங்கு மேலே போய் விட்டார்.

ஏன் இதனை இங்கே குறிப்பிடுகிறேன் என்றால் வெளி உலகமே தெரியாத நமது பெண்கள் இப்போது ஒரு புதிய உலகத்தைப் பார்க்கிறார்கள். அனுபவம் பெறுகிறார்கள். வேலை மட்டுமே என்று நினைத்துக் கொண்டிருந்த வாலிபர்கள் காப்புறுதி தொழிலின் மூலம் வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள்.   அவர்களுக்குப் பல புதிய அனுபவங்கள் கிடைக்கின்றன.

இந்த நேரடித் தொழில்கள் நமக்குப் பல அனுபவங்களைக் கொடுக்கின்றன. எந்த அனுபவமும் இல்லாத "பச்சை மண்ணாக"  தொழில் செய்ய வரும் புதியவர்களுக்கு இந்த நேரடி நிறுவனங்கள் ஒரு சில அனுபவங்களைக் கொடுக்கின்றன.  பண நிர்வாகத்தைக் கற்று கொடுக்கின்றன.

இந்த நேரடி நிறுவனங்கள் கொடுக்கும் அனுபவங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!  அனுபவங்கள் பெற இதுவே நமது ஆலோசனை!

No comments:

Post a Comment