Thursday 2 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (3)


பணம் தான் பிரச்சனையா?

நம்மிடையே ஒரு பிரச்சனை உண்டு.  "நான் வியாபாரத் துறையில் ஈடுபட ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் என்னிடம் பணம் இல்லை!" என்று யாரைக் கேட்டாலும் பதில் இப்படித்தான் வரும்.

ஒரு முறை நமது வானொலி வியாபார சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியில் ஒரு நேயர் பங்கேற்றார்.   அவர் பேசும் போது மேலே சொன்ன அதே பதில் தான் அவரும் கொடுத்தார். பேசுவது என்னவோ வாய்ப்புக் கொடுத்தால் வியாபார உலகத்தையே மாற்றி அமைத்து விடுவேன் என்கிற ரீதியில் பதில் அளித்துக் கொண்டிருந்தார் ஆனால் தன்னிடம் பணம் இல்லை என்பதில் உறுதியாக இருந்தார். அவரிடம் கேட்கப்பட்ட ஒரே கேள்வி "உங்களிடம் நூறு வெள்ளி இருந்தால் போதும், உடனே வியாபாரத்தை ஆரம்பித்து விடலாம்" என்று தான் அவரிடம் சொல்லப்பட்டது. ஆனால் அவரிடம் அந்த நூறு வெள்ளிக்கும் வாய்ப்பில்லை!

இவர்கள் எல்லாம் வெத்து வேட்டுகள்!  வியாபாரம் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் இப்படி ஒரு பதிலை வைத்திருக்க மாட்டார்கள். வியாபாரம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் தங்களிடம் ஓரளவாவது பணம் வைத்திருப்பார்கள்.  மற்றவர்களிடம் கடன் வாங்கித்தான் தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏமாற்றுக்காரர்கள்! தங்களுடைய பணத்தை வெளியாக்கக் கூடாது என்பது தான் அவர்களது கொள்கை.  தொழில் தோல்வி அடைந்தால் அது அவர்களது பணம் இல்லை! ஊரான் வீட்டுப் பணம் என்ன ஆனால் நமக்கென்ன என்கிற அக்கறையின்மை!

"மற்றவர்கள் பணம் கொடுத்தால் நான் வியாபாரம் செய்வேன்! அரசாங்கம் பணம் கொடுத்தால் நான் வியாபாரம் செய்வேன்" என்பவர்கள் எல்லாம் வியாபாரம் செய்ய இலாயக்கில்லாதவர்கள்! அவர்களை வியாபாரம் செய்யச் சொல்லி யாரும் அழைப்பு விடுக்கவில்லை.

வியாபாரம் செய்பவர்கள் தங்களது வியாபாரத்தை மேம்படுத்துவதற்காக கடன் வாங்கலாம். அது அவசியம் தேவை. வியாபாரம் செய்ய ஆரம்பித்துவிட்டால், அவர்களின் கணக்கு வழக்குகள் சரியாக இருந்தால், கடன் கொடுப்பதில் வங்கிகளும் தயாராக இருக்கின்றன.

வியாபாரத்தை ஆரம்பிக்க முன்னேரே உங்களுக்குக் கடன் தேவை என்றால் நீங்கள் வியாபாரம் செய்ய வேண்டாம்.  முதலில் உங்கள் பணத்தை முதலீடு செய்யுங்கள். பின்னர் பணம் தானாக வரும்!

No comments:

Post a Comment