தாய்மொழிப் பள்ளிகள் இனப் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன என்று சொல்லுகின்ற எதிர்ப்பாளர்களுக்கு ஒரு விஷயத்தை கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.
தாய்மொழிப் பள்ளிகள் தீடிரென்று இன்றோ நேற்றோ முளைத்தது அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இந்நாட்டின் அரசு மொழிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் மொழிகள் இவை.
இந்த இருநூறு ஆண்டுகளில்இந்தப் பள்ளிகளினால் எந்தக் காலத்தில் எந்த நேரத்தில் இனப் பதற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை நீங்கள் வரிசைப்படுத்த முடியுமா?
ஆனால் எங்களால் வரிசைப்படுத்த முடியும். ஸாகிர் நாயக் என்கிற இஸ்லாமிய அறிஞர் இந்நாட்டிற்குள் என்று காலடி எடுத்த வைத்தாரோ அன்றிலிருந்து இனப்பதற்றம் தோன்ற ஆரம்பித்துவிட்டது!
அவரை ஆதரித்து பெர்லிஸ் முஃப்தி எப்போது வாய் திறந்தாரோ அன்றிலிருந்து இந்நாட்டில் இனப் பதற்றம் தோன்ற ஆரம்பித்து விட்டது!
இன்னொன்றும் சொல்லலாம். பெர்லிஸ் முஃப்தி போலவே பெர்லிஸ் பல்கலைக்கழகமும் - இருவரின் கூட்டு முயற்சியில் - இனப்பதற்றத்தை ஏற்படுத்த முயற்சிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.
ஒரு முஃப்தியும் இந்தியர்களைத் தாக்குகிறார். ஒரு பல்கலைக்கழகமும் இந்தியர்களைத் தாக்குகின்றது என்றால் அவர்கள் நோக்கம் என்ன புனிதமானதா? அல்லது இறைவனை நோக்கி நகருகின்ற ஒரு முயற்சியா? இனப்பதற்றத்தை ஏற்படுத்துகின்ற முயற்சிகள் தானே!
ஒரு சிறிய பிரச்சனையைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தரப்பினர் எடுத்ததெற்கெல்லாம் :மே 13 திரும்ப வேண்டுமா?" என்று கூறி இனப்பதற்றத்தை ஏற்படுத்துவது என்ன தாய்மொழிப்பள்ளிகளா?
இவர்கள் ஏன் தாய்மொழிப்பள்ளிகளை வெறுக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு.
தேசியப் பள்ளிகள் தரமான கல்வியைத் தர தவறிவிட்டன. கல்வித்தரம் படுபாதாளத்திற்குப் போய்விட்டது என்பது அவர்களுக்கே புரியும்! நாம் சொல்லத் தேவை இல்லை! தேசியப் பள்ளிகளில் கட்டொழுங்கு என்பது பொதுவாகவே இல்லை என்பது பெற்றோர்களுக்குத் தெரியும்.
அதனால் தான் சீனப்பள்ளிகளில் மலாய் மாணவர்கள் 18 விழுக்காடு கல்வி கற்கின்றனர் என்கிறது புள்ளி விபரங்கள். ஏன் என்பதை எதிர்ப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சீனப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதங்கள் சிறப்பாக இருக்கின்றன. கட்டொழுங்கு பிரச்சனைகள் இல்லை. மாணவர்கள் நல்ல தரமான கல்வியைப் பெறுகின்றனர்.
சென்ற ஆண்டு தமிழ்ப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதங்கள் நாட்டில் முதலாவது இடத்தைப் பிடித்திருக்கின்றன.
இவைகள் எல்லாம் தாய்மொழிப்பள்ளிகளின் தரத்தைக் காட்டுகின்றன. நல்ல தரமான கல்வியைக் கொடுக்கும் தாய்மொழிப்பள்ளிகளுக்கு நாட்டில் இனப்பதற்றத்தை ஏற்படுத்த நேரமில்லை என்பதை எதிர்ப்போர் தெரிந்து கொள்ள வேண்டும்.
"எதிர்ப்போர்" வாயைத் திறக்காமல் இருந்தாலே போதும் நாட்டில் எந்த இனப்பதற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை!
தரமான கல்வியைப் பெறாதவர்களே பிரச்சனைகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்!
No comments:
Post a Comment