Monday 13 January 2020

வாருங்கள் நாமும் முன்னேறுவோம்! (14)

கொடுக்கவும் பழகிக் கொள்ளுங்கள்!

இப்போது தான் ஒரு செய்தியைக் காண நேர்ந்தது. 

கே.கே. சுப்பர் மார்ட் என்னும் நிறுவனம் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக நிதி ஒதுக்கீடு செய்வதாக அந்த செய்தி கூறியது. 

தொழில் துறையில் உள்ளவர்கள் இது போன்ற செய்திகளைப படிக்க வேண்டும். நம்மாலான உதவிகளையும் செய்ய வேண்டும்.

இன்றைய நிலையில் சீனப்பள்ளிகள் தலை நிமிர்ந்து நிற்கக் காரணம்  சீன வர்த்தகர்களின் தாராள மனப்பான்மை தான்.  பள்ளிகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கின்றனர்.  கொடுக்கின்ற பழக்கம் அவர்களிடம் அதிகமாக இருப்பதால் தான் கிடைக்கின்ற பழக்கமும் அவர்களுக்கு அதிகமாக இருக்கின்றது!  கொடுத்தால் தானே கிடைக்கும்.

நமது வர்த்தகர்கள் கோயிலுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கிறேன்  என்கிறார்கள்.  அது புண்ணியம் என்கிறார்கள்! பிள்ளைகள் கல்வி கற்பது என்பது புண்ணியம் இல்லையாம்.  இவர்கள் படித்து நமக்கு ஆகப் போவதென்ன?  என்கிற மனப்பான்மையை விட வேண்டும்.

தமிழ் நமது தாய்மொழி அல்ல என்னும் போக்கை விட வேண்டும். தமிழ் உங்களது தாய்மொழியாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் உங்களது வாடிக்கையாளர்கள் தமிழர்கள் என்பதை மறவாதீர்கள்.

எது எப்படி இருப்பினும் கொடுக்கின்றவர்களுக்குத் தான் இறைவனால் திருப்பி உங்களுக்குக் கொடுக்க முடியும்.   கல்வி என்பது சாதாரண விஷயம் அல்ல. ஓர் இனத்தை, ஓர் சமுதாயத்தை உயர்த்துகின்ற விஷயம்.   கல்வி வழி தான் ஓரு சமுதாயத்தை உயர்த்த முடியும். அத்தகைய கல்விக்கு வர்த்தகர்கள் வாரி வாரி கொடுக்க வேண்டுமே தவிர அப்படிக் கொடுப்பதை நாத்திகமாக நினைக்கக் கூடாது.

சீனர்களின் கல்வி அறிவுக்கு சீன வர்த்தகர்களின் பங்களிப்பு  அளப்பறியது. ஏன் நம்மிடம் மட்டும் அத்தகைய பரந்த நோக்கங்கள் இருப்பதில்லை?  ஒவ்வொரு இந்திய வர்த்தகரும் ஒரு தமிழ்ப்பள்ளியைத் தத்து எடுத்தாலே போதும். அந்த பள்ளியின் முன்னேற்றத்திற்கு, மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஆசிரியர்களுடன் நல்ல ஒத்துழைப்பைக் கொடுத்தாலே பல திறமையான மாணவர்கள் ஒவ்வொரு பள்ளியிலும் உருவாக்கப்படுவார்கள்.

வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் இந்தியர்கள் "ஒரு வழிசாலையாக" இருக்கக் கூடாது. எந்த அளவுக்கு பொருள் ஈட்டுகிறோமோ அதிலிருந்து ஒரு பகுதியைப் பொது காரியங்களுக்கு ஒதுக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். 

வர்த்தகர்கள் வெறும் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாக இருக்கக் கூடாது. கொடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும். சமுதாயத்திற்கு உதவுபவர்களாகவும் இருக்க வேண்டும்.

சீனர்களைப் பார்த்து நாமும் பழகிக் கொள்ள வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று. . தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவும் பழக்கத்தை ஒரு கொள்கையாக நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

கே.கே.சுப்பர் மார்ட்டை பாராட்டுவோம்! நாமும் அவர்களைப் பின்பற்றுவோம்!

No comments:

Post a Comment