Saturday 4 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (5)


சீனர்களுக்கு மட்டும் தான் கடன் கொடுக்கிறார்கள்!

நம்மிடையே வங்கிகளைப் பற்றியான ஒரு குற்றச்சாட்டு உண்டு. வங்கிகள் சீனர்களுக்கு மட்டும் தான் கடன் கொடுப்பார்கள். காரணம் கொடுப்பவர்களும் சீனர்களாக இருப்பதால் வாங்குபவர்களும் சீனர்களாக இருப்பதால் அவர்களுக்குத் தான் முதலிடம் என்பது நமது வாதம்.

இருக்கட்டும். ஆனால் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வங்கிகள், சீனர்களா, இந்தியர்களா, மலாய்க்காரர்களா என்று இன ரீதியில் சிந்திப்பதில்லை.  அவர்களுக்கு  வேண்டியதெல்லாம் பணம்! கொடுக்கல் வாங்கல் சரியாக இருக்க வேண்டும். கொடுக்கும் பணம் திரும்ப வந்து வங்கிகளுக்குச் சேர வேண்டும். இழுத்தடிப்புகள் இருக்கக் கூடாது! 

அதனால் நீங்கள் கேட்கும் பணத்தைக் கொடுத்தால் அந்தப் பணத்தைத் திரும்ப கொடுக்கும் சக்தி உங்களுக்கு உண்டா,  உங்களின் வியாபாரம் இலாபகரமாகப் போகிறதா என்று இப்படி சில அளவுகோள்களை அவர்கள் வைத்திருக்கிறார்கள். 

அதனால் தான் அவர்களிடமிருந்து ஆயிரத்தெட்டு கேள்வி கணைகள் உங்களை நோக்கிப் பாய்கின்றன!  அதற்கு நீங்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். உங்களிடம் பதில் இல்லையென்றால் நீங்கள் ஏமாற்றுக்காரர் என்று அவர்கள் ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.

எனக்குத் தெரிந்த ஒன்றை நான் சொல்லுவேன். வியாபார மேம்பாட்டுக்காக வங்கியில் கடன் வாங்கியவர் அவரது மகனுக்குத் திருமணம் செய்து வைத்தார்!  இன்னொருவர் வீட்டை பழுது பார்க்க அந்தப் பணத்தைப் பயன்படுத்தினார்!  அப்படியென்றால் அந்தக் கடனை எப்படி அவரால் திரும்பச் செலுத்த முடியும்? 

இப்படி பல குறைபாடுகள் நம்மிடம் உண்டு. ஆனால் நாம் வங்கிகளைக் குறை சொல்லுகிறோம்!

ஓர் உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். சீனர்கள் வியாபாரத்தில் மட்டும் தான் அவர்களின் ஈடுபாடு. வியாபாரத்தை மேம்படுத்த வேண்டும்.  வியாபாரத்தில் இன்னும் வளர வேண்டும். பெரும் பணக்காரனாக வேண்டும். சொத்து சுகங்கள் வாங்க வேண்டும்.  அதற்காக நாம் உழைக்க வேண்டும். இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும். முக்கியமாக வங்கியில் வாங்குகிற கடனை எந்த நிலுவையும் இல்லாமல் அதனை மாதாமாதம் கட்டிவிட வேண்டும். வாங்கிய கடனைக் கட்டினால் தான் வங்கியிடம் மீண்டும் மீண்டும் இன்னும் பெருந்தொகையாக கடனாகப் பெற முடியும் என்னும் அந்த அக்கறை, ஆர்வம் அவர்களிடம் உண்டு.

வியாபாரத்தை விட்டால் பிழைக்க வேறு வழியில்லை என்பதை சீன சமுகம் புரிந்து வைத்திருக்கிறது. அது அவர்களது பிழைப்பு. அது தான் அவர்களது உயிர். அதனால் கடன் வாங்கினால் அதனை முறையாகக் கட்ட வேண்டும் என்கிற அந்த ஒழுங்குமுறை! அதைத்தான் வங்கிகளும் விரும்புகின்றன.

நாம் வியாபாரத்தில் இருந்தால் அதன் வளர்ச்சிக்காக நூறு விழுக்காடு நமது பங்கை செலுத்த வேண்டும்.

வங்கிகள் ஏமாற்றுக்காரர்களை விரும்பமாட்டார்கள்! அவர்கள் இனம் பார்ப்பதில்லை!

No comments:

Post a Comment