Thursday 23 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (24)


நாம் எதனால் தொழில் செய்ய வேண்டும்?

நாம் தொழில் செய்து தான் ஆக வேண்டும். நாம் இழந்த பெருமைகளை மீட்டெடுக்க ஒரே வழி தொழில் செய்வது தான்.

நமது நாடு எல்லா வசதிகளையும் வாய்ப்புக்களையும் கொண்ட ஒரு நாடு. இந்த வாய்ப்புக்களையும் வசதிகளையும் எதனையும் பயன்படுத்திக் கொள்ளாமல் 'அது சரியில்லை! இது சரியில்லை!' என்று நாம் புதிது புதிதாக காரணங்களைக் கண்டு பிடித்துக் கொண்டிருக்கிறோம்! காரணங்களைக் கண்டு பிடிப்பதில் நம்மை விட்டால் வேறு ஆள் இந்த உலகத்திலேயே இருக்க மாட்டார்கள்!

இந்த நாட்டில் மட்டும் அல்ல உலகில் எந்த நாட்டில் இருந்தாலும் தொழில் செய்வதற்கான ஆர்வம் இருந்தால் இருக்கிற இடத்தில் இருந்தே முன்னேற்றம் அடைந்து விடலாம். 

எல்லாம் நம் பார்வையில் தான் இருக்கிறது. வாய்ப்புக்களும் வசதிகளும் நம்மைச் சுற்றி தான் இருக்கின்றன. அங்கு இங்கும் ஓட வேண்டாம். 

ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. தோட்டப்புறங்களிலே நமது மக்களில் பலர்  இரண்டு மூன்று தலைமுறையாக வாழ்ந்து வந்திருக்கின்றனர்.  எங்கோ ஒர் ஈய லம்பத்தில் வேலை இழந்த  நடுத்தர வயதுள்ள சீனர் ஒருவர் அந்த தோட்டத்திற்கு வேலைக்கு வந்தார்.ஓரிரு மாதங்கள் போயின. இப்போது அவர் அங்குள்ள பால்மரம் வெட்டும் தொழிலாளர்களுக்கு அவர்களின் உளிகளை தீட்டிக் கொண்டிருந்தார்! அந்த உளிகளைத் தீட்டுவதற்கு ஒவ்வொரு மாதமும் அவருக்கு இரண்டு வெள்ளி கொடுத்து வந்தார்கள்.! இது நடந்தது ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்னர்! என்ன சொல்ல வருகிறேன் என்றால் பொருளாதார உயர்வு என்று வரும் போது நம்மைச் சுற்றியுள்ள வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ள சிலருக்குத் தெரிகிறது. பலருக்குத் தெரியவில்லை. அதுவும் நம் மக்களுக்கு கண்ணுக்குத் தெரிவதேயில்லை! இது ஒரு சிறு தொழில் தான்.  அதன் மூலம் அதிகப்படியான வருமானைத்தை அவர் பெருகிறார்!

நமது மக்களில் ஒரு சிலர் கூட தங்களது சிறு சிறு கொல்லைகளில் வெற்றிலை பயிர் செய்து அதனை சிங்கப்பூருக்கு இரயில் மூலம் அனுப்புவதை நான் பார்த்திருக்கிறேன்.  இவர்கள் பிள்ளைகள் தான் பிற்காலத்தில் வியாபாரிகளாக மாறியிருக்கிறார்கள். வாழ்த்துகிறேன்!

அது போல நம்மைச் சுற்றியுள்ள தொழில் வாய்ப்புக்களும் சிலருக்குத் தெரிகிறது. பலருக்குத் தெரிவதில்லை.  தெரிந்தவர்களுக்கு அதிக வருமானம். தெரியாதவர்களுக்கு அதே சம்பளம், அதே செலவுகள் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்த வழி தெரியவில்லை அல்லது சோம்பேறித்தனம்!

ஏன் தொழில்செய்யவேண்டும்?  வருமானத்தை அதிகரிக்க வேண்டும். பிள்ளைகள் பட்டதாரிகளாக வேண்டும். சொந்த வீடு வாங்க வேண்டும். நாலு பேருக்கு நடு வே நல்லபடியாக வாழ்ந்து காட்ட  வேண்டும்.  அதற்குப் பணம் தேவை. அது தொழில் செய்வதன் மூலமே கிட்டும்.

அதனால் சிறிய தொழிலோ, பெரிய தொழிலோ தொழில் செய்வதே முக்கியம். வருமானத்தைப் பெருக்குவதே முக்கியம். நமது வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே முக்கியம்.

தொழில் செய்வோம்! உயருவோம்!

No comments:

Post a Comment