Wednesday 22 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (23)


குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு!

மிகவும் அனுபவித்து சொல்லப்பட்ட அனுபவ மொழி! ஆனால் அது குடிகாரனுக்கு மட்டும் அல்ல. அதனை விற்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறானே அவனுக்கும் சேர்த்துத் தான் இந்த பழமொழி!

ஒருவன் குடித்துவிட்டு உளறுபவன். ஒருவன் குடிக்காமலேயே குடும்பங்களைக் குதறுபவன்! ஒருவனின் குடும்பம் அவன் வீட்டோடு போச்சு.   பல குடும்பங்களின் சாபம் விற்பவனின் வாரிசுகளுக்கும் தொடரும்!

நண்பர்களே! தொழில் செய்யுங்கள். அது உங்களுக்குக் கௌரவத்தைக் கொடுக்கும். உங்கள் குடும்பத்தை உயர்த்தும். சமுதாயத்தின் பொருளாதரத்தை உயர்த்தும்.  கையில் பணம் இருந்தால் நாலு பேர் மதிப்பார்கள்.

ஆனால் தவறான வழியில் சம்பாதிக்கும் பணம் குடும்பத்தை நாசமாக்கும். ஒரு சில இந்தியர்கள் "எங்களைக் குறை சொல்லுகிறீர்களே சீனர்களை யாரும் குறை சொல்லுவதில்லையே! அவர்கள் தானே மது விற்பனையில் முதலிடத்தில் இருக்கிறார்கள்!"   என்கிறனர்.

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  இந்நாட்டில் மது விற்பனை என்பதே சீனர்களை நம்பித்தான்.  ஆனால் அவர்கள் குடிக்கிறார்களா என்பதைக் கூட நாம் நம்ப முடியவில்லை!   அந்த அளவுக்கு அவர்கள் குடிகாரர்கள் என்பது கூட நமக்குத் தெரிவதில்லை! குடித்தாலும் அவன் பொறுப்போடு நடந்து கொள்ளுகிறான். அவனால் அவன் குடும்பம் அதிக பாதிப்பு அடைவதில்லை.

நம் நிலைமை அப்படியா?  கண்ட கண்ட சாரயத்தைக் குடித்துவிட்டு குடும்பத்தை சீரழிக்கிறான்.  பிள்ளைகள் கல்வியைத் தொடர முடியவில்லை. குடும்பம் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் திண்டாடுகிறது. நடு வீதியில் சண்டை போடுகிறான். செத்த பிணத்தை வைத்துக் கொண்டு நியாயம் பேசுகிறான். ஒருவனை ஒருவன் வெட்டிக் கொண்டு சாகிறான்.

இது தான் நமது நிலை.  இந்த நிலையில் நாம்  குடியை வைத்து சம்பாதிக்க நினைப்பது எவ்வளவு கேவலமான நிலைமை. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எந்த அளவுக்கு நமக்குச் சாபத்தைக் கொடுப்பார்கள் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

நமது சமுதாயம் இன்று வீழ்ந்து கிடப்பதே குடியினால் தான்! இதில் சந்தேகமே இல்லை! இதில் வேறு நாம் அவர்களைக் கெடுக்க வேண்டுமா, யோசியுங்கள். குடிகாரன் என்னும் பெயர் நமக்கு வேண்டாம்!

வீழ்ந்து கிடப்பவனை இன்னும் வீழ்ந்து கிடக்க நாமே காரணமாக இருப்பதா? வேண்டாம்! அந்த பழிச்சொல் நமக்கு வேண்டாம். அந்த குடும்பங்களின் சாபம் நமக்கு வேண்டாம்.

மது விற்பவனுக்கு....எதுவுமே விடியாது!

No comments:

Post a Comment