Sunday 7 June 2020

உணவகங்கள் நிலை என்ன ஆகும்?

பொதுவாகவே நமது நாட்டின் எல்லா உணவகங்களும், கோரோனா தொற்றினால், பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பது உண்மையிலும் உண்மை. 

இதில் இந்திய உணவகங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கின்றன என்று சொல்லுவதில் உண்மை இல்லை. 

எனது நிறுவனம் பக்கத்திலேயே ஒரு பிரமாண்ட மலாய் உணவகம் ஆரம்பித்து ஒரு சில மாதங்களே ஆகின்றன. அதனை நடத்துபவருக்கோ பெரிய அடி என்பதில் ஐயமில்லை.  அவருடைய வேலையாள்கள் பெரும்பாலும் இந்தோனேசியர்கள். ஒருவர் உள்ளூர் இந்தியர். அவர்களுக்கு, உள்ளுர் வாசியைத் தவிர,  மற்றவர்களுக்குச் சம்பளம் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. சாப்பாடு போட்டாலே அதுவே பெரிய விஷயம். அதனை அவர் செய்கிறார். 

சீன உணவகங்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பு உண்டு. இல்லை என்று சொல்ல முடியாது. அவர்களும் பலர் வெளி நாட்டினரை நம்பியே உள்ளனர். பல உணவகங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. வெளி நாட்டினரையே நம்பி இருப்பவர்கள் கொஞ்சம் தாமதமாகும்.  சொந்தமாகவே தொழில் செய்வோர் இப்போதே ஆரம்பித்துவிட்டனர்.

கொரோனா தொற்று உலகையே புரட்டிப் போட்டுவிட்டது என்று சொல்லுகிறார்களே அது முற்றிலும் உண்மை. அதிலும் உணவகங்கள், தங்கள் தொழிலைத் தொடர,  இனி வேறு வழி வகைகளைக் காண வேண்டும்.  அது என்ன வழி என்பது அவர்களுக்குத் தான் தெரியும்.

பழைய நிலைக்கு உணவகத் தொழில் மீளுமா என்பதை இப்போது கணிக்க முடியவில்லை. அது கொரோனா இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பதைப் பொறுத்தது.  நீண்ட நாள் என்றால் பாதிப்பு அதிகமாகவே இருக்கும். ஆனாலும் பிரச்சனைகள் வரும் போது அதற்கு ஒரு தீர்வும் வரும். இப்படித்தான் எல்லாக் காலங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது.

உள் நாட்டில் வேலை வாய்ப்புக்கள் குறைந்துவிட்டன. ஒரு வேளை. தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக, இனி உணவகங்களுக்கு மலேசியர்கள் கிடைக்கலாம். ஏதாவது ஒரு வேலையைச் செய்து தங்களின் குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.

உணவகங்கள் என்பது முக்கியமான ஒரு தொழில்.  நாட்டில் பல கோடிகளைச் சம்பாதித்துக் கொடுக்கும் தொழில் அது.

நிச்சயமாக அரசாங்கம் அதனைக் கவனத்தில் கொள்ளும் என நம்பலாம். உணவகங்கள் நடத்துவோரின் தேவைகளைக் கவனத்தில் கொண்டு அவர்களுக்குத் தேவையான பொருளாதார உதவிகளை அரசாங்கம் செய்யும் என நம்பலாம்.

அரசாங்கம் தான் இன்றைய பெரிய முதலாளி.  அதனால் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைத்துத் தொழில்களுக்கும் அரசாங்கத்தின் உதவி இல்லாமல் மேலும் தொடர முடியாது.

தொழில் செய்வோர் பலர் முதலாம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்.  அதனை அரசாங்கம் கவனத்தில் கொண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யும் என நம்புவோம்.

No comments:

Post a Comment